"புரட்டாதிச் சனி" என அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். இவ் வருடம் செப்ரெம்பர் மாதம் 18ம் திகதி (18.09.2010) முதலாவது புரட்டாதிச் சனி விரதமும்; அன்றிலிருந்து அடுத்து வருகிற 4 சனிக்கிழமைகளுடன் (செப்ரெம்பர் 25, ஒக்ரோபர் 02, 09, 16) ஐந்து புரட்டாதிச் சனி விரத நாட்களாக இவ் வருடம் அமைகின்றது.
சனீஸ்வரன் கோசாரமாக சஞ்சரிக்கும் போது (தற்போதைய கிரக சஞ்சாரத்தில்) ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் (சந்திர) இராசிக்கு 5 வது இராசியில் சஞ்சரிக்கும் காலம் பஞ்சம சனியென்றும்; 8 வது ராசியில் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச் சனியென்றும்; 12 வது இராசியிலும், சந்திர இராசியிலும், சந்திரனுக்கு 2 வது இராசியிலும் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் (மூன்று ராசிகளையும் கடக்க எடுக்கும் காலம் ஏழரை ஆண்டுகள் அதனால்) கூறுவர். சனீஸ்வரர் மந்தகதி உடையவர். இவர் ஒரு ராசியைக் கடக்க இரண்டரை வருடங்கள் ஆகின்றன. அதனால் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு முப்பது ஆண்டுகளுக்கு ஒரு தடவை இத் தோஷங்கள் சுழற்சியாக ஏற்படுகின்றன.
இத் சனிதோஷ காலங்களில்; புத்திர பாக்கியக் குறைவு, மரண பயம், அதிக பிரயாணம், அதிக செலவு, பண நஷ்டம், தேகசுகக் குறைவு, வீண் சச்சரவு என்பன உண்டாம். இவை யாவும் சனிதோஷத்தினால் ஏற்படுபவை என கூறப்பெறுகின்றது. இத் தோஷத்தினால் பீடிக்கப் பெற்றவர்கள் தோஷ நிவர்த்தி செய்வதால் சனீஸ்வரன் மகிழ்வுற்று தாக்கங்கள் குறைவடைந்து நன்மைகள் ஏற்படுவதாக ஐதீகம் இவற்றுள் ஏழரைச் சனிகாலம் மிகவும் கஷ்டமான காலமாக ஜோதிடம் கணிக்கின்றது.
சனீஸ்வரனைப்போல் கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என சோதிடம் கூறுகின்றது. அதனால் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு. இவ் இராசிகளில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும் போது பல கஸ்டங்களையும் நஸ்டங்களையுந் தந்து துன்பப்படுத்திய சனீஸ்வரன் இவ் இராசிகளைக் கடந்து அடுத்த ராசிக்கு செல்லும் போது நஸ்டங்களை ஈடுசெய்யும் வகையில் கொடுத்து விட்டுச் செல்வார் என்பது ஐதீகம்.
சனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணைய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கறுப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டளமாகக் கட்டி எள்ளெண்ணை (நல்லெண்ணை) விட்டு விளக்கேற்றிச், அர்ச்சனைகள் செய்து சனீஸ்வர தோத்திரம் பாடி சனீஸ்வரனை வழிபட வேண்டும். அதன் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிராத்தித்து கோளறுபதிகம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்கவேண்டும். வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்க வேண்டும். சனீஸ்வரனின் வாகனமாக காகம் அமைவதால் உணவருந்து முன் காகங்களுக்கு உணவு படைத்தபின்பே தாம் உணவருந்துவர். மற்றய விரதங்களின் போது எண்ணை வைத்து தோயும் வழக்கம் இல்லை. ஆனால் சனிக்கிழமை-சநீஸ்வரனுடைய விரதத்திற்கு மாத்திரம் எண்ணை வைத்துத் தோயும் முறை கடைப்பிடிக்கப் பெறுகின்றது. காரணம்;
நம் முன்னோர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நல்லெண்ணை உடல் முழுக்க பிரட்டி சிறிது நேரம் (உடம்பில் சுவறும் வரை) இருந்து தோய்வது வழக்கமாக இருந்தது எங்கள் எல்லோருக்கும் தெரியும். காரணம் கேட்டால் உடம்புச் சூடு தணிய என்று கூறுவார்கள். ஆனால் அதற்கு இன்னுமொரு காரணம் இருப்பதாக விஞ்ஞான ரீதியில் கூறப்பெற்றுள்ளது. இந்த சனிக்கிரகம் உடலுக்கு தீங்கு (தோஷத்தை) ஏற்படுத்தக் கூடிய தீய கதிர் வீச்சுக்களை வீசுகின்றது. அதனால் அதனை ஒரு பாபக் கிரகமாக ஜோதிடம் அடையாளம் காட்டுகின்றது. சனி கிரகம் ஒரு ஜாதருக்கு பெரும் தோஷத்தை ஏற்படுத்தக் கூடிய இடங்ளில் (ஜாதகத்தில் சந்திர ராசிக்கு 1, 2, 5, 8, 12 ஆகிய இடங்களில்) கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர்வீச்சுக்கள் மேலும் தீவிரம் அடைவதாக கணிக்கப் பெற்றுள்ளன. அதனால் அந்த ஜாதகர் உடல், உள்ளம் ரீதியாக பெரும் பாதிப்பை பெறுகின்றார். சனிக்கிரகத்தில் இருந்து வரும் கதிர்களை எள் எண்ணையில் சுவறிய எமது உடம்பு, தாக்க விடாது தடை செய்கின்றது. தீய கதிர்கள் எம் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணைமுழுக்கு.
இத் தீய கதிர்கள் மூளை நரம்புகளை பாதிக்கின்றது. ஜாதகருடைய சிந்தனைகளை திசைமாறி செல்ல வைத்து பல சிக்கல்களில் மாட்டிவிடுகின்றது. அந்த கிரகத்தின் கதிர் வீச்சிலிருந்து தப்பிச்க பல பரிகார சடங்குகள் இருந்தாலும் மிக முக்கியமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் உடல் முழுக்க எள் எண்ணையய் (நல்லெண்ணை வைத்து) பிரட்டி சூரிய உதயத்தில் 1/2 மணி நேரம் நின்ற பின் தோய வேண்டும், அதனால்தான் எமது முன்னோர்களும் சனிக்கிழமைகளில் எண்ணை வைத்து தோயும் வழக்கத்தினைப் பின்பற்றியுள்ளனர் என்பது வெளிப்படை. ஆனால் தற்போது நாகரீக மேலாதிக்கத்தினால் அவை பின்பற்றப் பெறுவதில்லை.
அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர் சனீஸ்வரன். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கும். புரட்டாதிமாத முதற்சனி வாரத்தன்று சூரியன் மனைவியான சாயாதேவியிடம் சனிபகவான் தோன்றினார். சாவர்ணிமனுவும், பத்திரை என்ற பெண்ணும் இவருக்கு உடன்பிறப்புக்கள். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாதிச் சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம். சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும்.
சனிக்கிரகம்; நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரியபகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன் சனீஸ்வரனைத் தூக்கித் தூரவீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடவனார் என்று புராணங்கள் கூறுகின்றன.
இயம தர்மராஜனின் அவதாரமே சனிபகவான் என்றும் கூறுவர். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ , விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு, சிவ விஷ்ணுக்களையும் வழிபடுவது கட்டாயமாகின்றது. சனீஸ்வரன் சிறந்த சிவபக்கதன். இந்தியாவில் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரனார் கோவில் மிகவும் பிரசித்தமானது. இங்கே நள மகாராஜான் சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரனால் பீடித்த துன்பத்தில் இருந்து விடுபட்டான் என்றும் கூறுவர்.
அரிச்சந்திர மகாராஜான் அரசிழந்து சுடலையில் காவல்காரன் ஆனதும், பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செய்ததும், இராமபிரான் வனவாசம் செய்ததும், சீதை இராவணனால் கவரப்பட்டு சிறையிலிருந்ததும் சனீஸ்வரனின் தோஷத்தாலே என்று நூல்கள் கூறுகின்றன.
இந்திரஜித்து இராவணனின் மகன். இவன் பிறப்பதற்கு முன் இராவணன் சோதிடர்களை அழைத்து நல்ல முகூர்த்தவேளை குறிக்கும்படி கட்டளை இட்டான். அவன் கட்டளைக்கமைய சனீஸ்வரனை பதினோராம் வீட்டில் இருக்க முகூர்த்தம் எடுக்கப்பட்டது. ஆனால் இந்திரஜித் பிறக்கும் பொழுது சனி தனது ஒரு காலைப் பன்னிரண்டாம் வீட்டில் நுழைத்துவிட்டார். இதனால் சீற்றமடைந்த இராவணன் அவரின் ஒரு பாதத்தை துண்டித்தான் என்றும் கூறுவர்.
சனீஸ்வரன் தானியம் எள்ளு, வர்ணம் கறுப்பு, வாகனம் காகம். எனவேதான் சனீஸ்வர தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஏழு சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்து, நீராடி, சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு எள்ளு, கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு, நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபடவேண்டும். துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து பின் சிவன் அல்லது விஷ்ணு சந்தினாதமடைந்து, சனிதோஷம் நீங்கப் பிராத்திக்க வேண்டும். அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூவரிற்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு விரத்தை முடிக்கலாம். இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறும்.