Wednesday, August 04, 2010

சமய மெய்நெறி நோக்கிய ஒரு பார்வை

கிறிஸ்தவம் என்பது இது அல்லவா?

 இன்றைக்கு தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு மதப்பிரச்சாரத்தில் ஈடுபடும் பலரும் இந்து மதத்தினைப் பற்றி பலவாறான அவதூறுகளை வெளியிட்டு வருகின்றார்கள். இந்துமத்தில் உள்ள பல்வேறு கிரியை மரபுகளை தவறானது என்றும் மூடத்தனமானது என்றும் கூறி தமது வழிபாட்டுமறைமையே மேன்மை மிக்கது என்று பட்டி தொட்டி எங்கும் பிரசங்கித்து வருகின்றார்கள். தெற்காசிய தேசமெங்கும் இந்துக்களைக் குறிவைத்து மதப்பிரச்சாரம் செய்து வருவதைத் தவிர மேற்குலக நாடுகளில் சென்று வாழும் இந்துக்களின் வீடுகள் தேடி வந்தம் இவர்கள் தமது பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆக, கிறிஸ்தவ சமயிகளின் மூலநூலான புனித விவிலியம் என்ற பைபிளில் இக்கிரியை மரபுகள் பற்றி என்ன கூறப்பட்டுள்ளது என்று சிந்திப்பது பொருத்தமானது. இது கிறிஸ்தவ நிந்தனைக்காக அல்ல. மாறாக, அவர்களால் மூடக்கொள்கைகள் என்று கூறப்படுபவை பற்றி அவர்களின் மிகப்பிரதான புனித நூல் கூறும் கருத்துக்களை அறிவின் துணைக்கொண்டு ஆராய்வதேயாகும்.
திருவுருவ ஆராதனை, ஆலயம், யாத்திரை

   
இந்துக்கள் ஆலயங்களை அமைத்து அதில் திருவுருவங்களை ஸ்தாபித்து முறைப்படி வேதாகமப் பிரகாரம் கும்பாபிஷேகம் செய்து அத்திருவுருவினூடே இறைவனை வழிபடுவதை தம் வழக்கமாகக் கொண்டவர்கள். கிறிஸ்துவ மத போதகர்களில் பலரும் இவ்வாறு திருவுருவ ஆராதனம் செய்வது தவறானது என்று பிரசங்கித்து வருகிறார்கள். ஆனால்
பைபிளில் பழைய ஏற்பாட்டிலுள்ள யாத்திராகமம்- 25ம் அதிகாரம் முழுமையும்
“கர்த்தர் மோசேயை நோக்கி , சித்தீம் மரத்தினால் இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமும் ஒன்றரை முழ உயரமும் உடையதாய் ஒரு பெட்டி பண்ணி அதனை பசும் பொன் தட்டால் மூடுவாய், அதன் மேல் கிருபாசனம் ஒன்றினை அமைத்து அதன் இருபறத்தும் பசும் பொன்னால் இரு கேருபீன்களை (இரு விக்கிரகங்களை) அமைக்குக, அப்பெட்டியினுள் தாம் எழுதிக் கொடுத்த சாட்சிப்பத்திரத்தினை வைத்து ஸதா காலமும் ஆராதனம் பண்ணிடுவாயாக” என்று விதித்தமை விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

இதே யாத்திராகமத்தின் 35, 36, 37ம் அதிகாரங்களில் “மோசே கர்த்தர் கட்டளை இட்ட பிரகாரம் முறைப்படி இவ்வமைப்பினை உருவாக்கி பிரதிஷ்டை செய்தமை” கூறப்பட்டிருக்கிறது.

 யாத்திராகமத்தின் 40ம் அதிகாரத்தில் ஆரோனும் அவனின் சந்ததியாரும் தலைமுறை தலைமுறையாக இப்பெட்டியை ஆராதிக்க ஆசாரியார்களாக (குருமார்களாக) நியமிக்கப்பெற்றமையும், கர்த்தர் கிருபாசனத்தில் எழுந்தருளியிருந்து அருள்பாலித்தார் என்றும் கூறப்படுகின்றதே? எண்ணாகமம், சங்கீதம் ஆகியவற்றிலும் இது பற்றி விவரிக்கப்படுகின்றன.

யோசுவா 7ம் அதிகாரத்தில் “இஸ்ரவேலர் தம் எதிரிகளால் தோற்கடிக்கப்பட்ட போது யோசுவா மற்றும் இஸ்ரேலியரின் மூப்பர் ஆகியோர் அச்சாட்சிப் பெட்டியின் முன்றலில் சாயங்காலம் வரை சாஸ்டாங்கமாக விழுந்து கிடந்து நமஸ்கரித்து எதிரிகளை வெல்ல வரம் பெற்றமை கூறப்பட்டுள்ளது.” இது போலவே சாமுவேல், இராஜாக்கள் ஆகிய பிரிவுகளிலும் சாட்சிப்பெட்டி பிரதிஷ்டை, ஆராதனை, பலியாராதனம், பற்றியெல்லாம் விளக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வது கர்த்தரின் கட்டளை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க தற்காலத்தில் அந்த கர்த்தரின் கட்டளையை புறக்கணித்து விடுவது தகுதியானதா? அந்தப் பெட்டியை அவமதித்தவர்களை கர்த்தர் தண்டித்ததாயும் கூறப்பட்டுள்ளதே. இது இவ்வாறாக, இந்துக்கள் மூடத்தனமாக விக்கிரக ஆராதனம் செய்வதாகச் சொல்வது எவ்வளவு மடமையானது.

இது போலவே இந்துக்கள் காசி யாத்திரை, கைலாஸ யாத்திரை போன்ற புண்ணியஸ்தல யாத்திரைகளில் ஈடுபடுவதையும் கிறிஸ்தவர்கள் சிலர் மடமை என்று சொல்லுகின்றனர். ஆனால் பைபிளில் யாத்திராகமம், சங்கீதம்(9), இராஜாக்கள், சாமுவேல் போன்ற பலவற்றிலும் கர்த்தரின் புனித மலை பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஓரெப் என்ற அம்மலையில்  மோசே அடைந்த போது அப்பரிசுத்த ஸ்தானத்தில் பாத அணிகளைக் காலினின்று கழற்றி விட்டு வருமாறு கர்த்தரே அவனுக்குப் பணித்ததாகக் கூறப்பட்டுள்ளது. (ஆனால் இன்றைக்கு சில கிறிஸ்தவர்கள் பாதரட்சைகளைக் கழற்றாமலே தம்முடைய தேவாலயங்களில் பிரவேசிக்கிறார்களே) இது தவிர யெருசலேம் முதலிய இடங்களிலும் கர்த்தரின் திருவாணைகளுக்கு ஏற்ப ஆலயங்கள் அமைத்து வழிபாடாற்றி வந்ததாயும் கூறப்படுகின்றது.
அபிஷேகம், நைவேத்தியம், தீப- தூப ஆராதனை

  
இந்துக்கள் பயபக்தியுடன் இறைவனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் போன்றவற்றால் ஆகமமுறையினின்று வழுவாமல் அபிஷேகித்து அலங்காரம் செய்து தீப- தூப ஆராதனைகளைச் சமர்ப்பிப்பதைக் காண்கின்ற கிறிஸ்துவப் போதகர்களில் சிலர் மிகத்துயருற்றவர்கள் போல “வீணே பால், பழங்களை விரயம் செய்கிறீர்களே, இவற்றை ஏழைகளுக்குக் கொடுத்தால் புண்ணியமே” என்று சொல்லியும் எழுதியும் வருகின்றார்கள்.

ஆனால் யாத்திராகமத்தில் 30ம் அதிகாரத்தில் கர்த்தரானவர் மோசேயை நோக்கி “அதியுத்தம சுகந்தத் திரவியங்களான குறித்த திரவியங்களை ஒருங்கு சேர்த்து அபிஷேகத் திரவியத்தைத் தயாரித்து முறைப்படி சாட்சிப்பெட்டி உள்ளிட்ட இறை சாந்நித்தியம் கொண்ட அனைத்து பொருட்கள் மீதும் அபிஷேகம் செய்யுமாறு” கட்டளையிட்டிருக்கக் காண்கிறோம். இதே போல ஆரொனையும் அவன் தலைமுறையினரையும் அபிஷேகித்து குருத்துவம் செய்யச் செய்யுமாறும் கட்டளையிட்டிருக்கக் காண முடிகின்றது.

இது போல சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்படுவதைக் கண்டும் பலவாறு இகழ்ந்து திரிகின்றனர். யாத்திராகமம் 25-30ல் “எனது சந்நதியில் தினமும் சமுகத்தப்பம் வைக்கப்பட வேண்டும்” என்று கட்டளையிட்டிருக்கக் காணலாம். எண்ணாகமம், லேவியர் போன்றவற்றிலும் விரிவாக நைவேத்திய மரபுகள் சொல்லப்பட்டுள்ளன.

இது போலவே இந்துக்கள் ஆலயத்தில் சுவாமியின் திருவுருவத்தின் முன் பலவித தீபங்களை காட்டி, பூஜிப்பதைக் கண்டு என்ன வேடிக்கை? என்று வினவும் கிறிஸ்து சமயியர் தம் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற தீபாராதனை தூபராதனைக் கட்டளைகளை காண்பது நலம். தற்போது கிறிஸ்துவ ஆலயங்கள் சிலவற்றில் தூப- தீப ஆராதனைகளைச் செய்வதையும் காணமுடிகின்றது. இது தவிர நமது தேவஸ்தானங்களில் ஹோமங்கள் செய்யப்படுவதையும் அந்த அக்னியில் தேவர்களுக்காக ஆஹ_தி வழங்கப்படுவதையும் இகழும் கிறிஸ்துவர்கள் பழைய ஏற்பாட்டில் நெருப்பை உருவாக்கி அந்த நெருப்பில் தேவனுக்கான பலிகளைச் செலுத்தியதாக காணப்படும் அநேக வசகங்களை வாசித்துச் சிந்திக்கக் கடவர். இது தேவ கட்டளை என்றே தங்கள் மதநூல் கூறுவதையும் உணரக்கடவர்.
திருவிழா- வழிபாடுகள்- நம்பிக்கைகள் போன்றன

 சைவ- வைஷ்ணவத் திருக்கோயில்களில் மஹோத்ஸவம், மாதோத்ஸவம், பக்தோத்ஸவம் முதலிய திருவிழாக்களை முறைப்படி செய்வதையும் சிறப்பு வாகனங்களில் சுவாமியின் திருவுருவை எழுந்தருளச் செய்து பக்தர்கள் தம் தோள்களி;ல் காவி வருவதையும் அத்திருவுருவின் முன்னே மங்கல இசை முழங்க நாட்டியங்கள் நடைபெறுவதையும் கண்டு “ஆ…இவ்வளவு பணம் விரயமாகிறதே….” என்று தூஷித்துக் கொள்ளும் கிறிஸ்து மதத்தார்…

தம் மூல நூலாகிய பைபிளில் “நாளாகமம்” 15ம் 16ம் அதிகாரங்களில் ஆண்டவராகிய கர்த்தரின் கட்டளையின் பிரகாரம் அத்தேவனுடைய சாட்சிப்பெட்டியை (இது நம் திருக்கோயில்கள் சிலவற்றில் பிரதிஷ்டிக்கப்பட்டுள்ள மகிமை பொருந்திய யந்திரம் ஸ்தாபிக்கப்பெற்ற பெட்டியை ஒக்கும்) அதன் தண்டுகளுடன் தோள்களில் தூக்கி வந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு தூக்கி வரும் வேளையில் இறைவனே எழுந்தருளி வருவதாகக் கருதி தாவீதின் கட்டளைப்படி பாடகராகிய ஏமானும், ஆசாப்பும், ஏத்தானும், பஞ்சலோகக் கைத்தாளங்களைத் தட்டிபாடினார்கள் (நாளா15-19)

சகரியா முதலிய எண்வர் “அலமோத்” என்னும் இசையில் பாடி தும்புரக்களை வாசித்தார்கள். (நாளா15-20) மத்தித்தியா முதலிய அறுவர் “செமனீத்” என்ற இசையில் பாடி சுரமண்டலங்களை நேர்த்தியாக வாசித்தார்கள்(நாளா 15-21) பெரக்கியாவும் எல்க்கானாவும் பெட்டியை காவல் காத்து வந்தார்கள்.( நாளா 15-21) தாவீது ராஜா ஆடிப்பாடி மகிழ்ந்து வந்தான். (நாளா- 15-29) என்றெல்லாம் கூறப்படுவதைக் கவனிப்பார்களாக.

அடுத்து வரும் 16ம் அதிகாரத்தில் அப்பெட்டி முன்பாக அவர்கள் சர்வாங்க பலி சமர்ப்பித்தமை பற்றியும் தகனபலி, சமாதான பலி சமர்ப்பித்தது பற்றியும் விளக்கமாகக் கூறி இவற்றினை ஆற்றியவர்களுக்கு கர்த்தர் பேரருள் புரிந்தார் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இது போலவே இந்துக்கள் மார்கழி மற்றும் ஆடி மாதங்களில் “பீடமாதம்” (இறைவனை தம் மனப்பீடத்தில் ஏற்றி வழிபடும் காலம்) என்று தமது மற்றைய மங்கல காரியங்கள் யாவற்றையும் ஒதுக்கி விட்டு இறை வழிபாட்டில் ஈடுபடுவதைக் கண்டு கேலி செய்கின்றனர். ஆனால் அமாவாசையும் பௌர்ணமியும்(பூரணையும்) ஓய்வு நாளும் மாதப்பிறப்பும் வழிபாட்டிற்குரியது என்றும் அந்நாட்களில் பிற வேலைகள் யாவற்றையும் நீக்கி இறை வணக்கத்திலீடுபட வேண்டும் என்றும் பைபிள் விதிப்பதைக் காணாதிருக்கிறார்கள்.

இந்துக்கள் ‘பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே’ என்று இறைவனை ஸ்ரீமந் நாராயணனாகவும் பார்வதீ பரமேஸ்வரனாகவும் தேவியருடன் கூடிய ஸ்வாமியாகச் சேவிப்பதை கண்டு கிறிஸ்தவ சமயியருள் சிலர் பலவாறு கேலி பேசித்திரிகி;னறனர். தத்துவார்த்தப் பொருள்களை அறியாமலும் அறிவித்தாலும் காதில் வாங்கிக் கொள்ளாமலும் விதண்டாவாதம் செய்கின்றனர். அவர்கள் ஒரு முறை சாலமோனின் உன்னதப்பாட்டு என்ற பைபிள் பகுதியை அவதானதுடன் வாசிப்பார்களாக.
உதாரணமாக உன்னதப்பாட்டின் அதிகாரம்-1 ல்
“உமது பரிமளத்தைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள், உமது நாமம் ஊற்றுடைய பரிமளத்தைலமாயிருக்கிறது. ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்” (வசனம்-3) முதலிய ஏராளமான உடலியல் பற்றிய வர்ணனைகள் நிறைந்த காதல் சுவையுடன் கூடிய பல வசனங்களைக் காணலாம்.
யார் இறைவழிபாட்டைத் தலைமை தாங்கி நடாத்தத் தகுதியுடையவர்?
 இன்றைக்கு இந்துக்களைப் பார்த்து ஜாதியடிப்படையிலேயே உங்களுக்கு அர்ச்சகர்கள் அமைகிறார்கள் என்று கூறி “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை மறந்து விட்டீரோ? என்றும் உங்கள் மதம் அர்ச்சகராக பிறப்பின் பேரில் மட்டுமே இடம்தருகிறது என்றும ;பலவாறாக விமர்சிக்கும் (உண்மையில் இந்துமதத்தில் அவ்வாறல்ல என்பது வேறு சமாச்சாரம்) கிறிஸ்துவர்கள் தங்கள் வேதாகமத்தில் கர்த்தர் ஆரொனையும் அவன் சந்ததியாரையும் தலைமுறை தலைமுறையாக குரத்துவம் செய்யும் படியாக அபிஷேகம் செய்யக்கட்ளையிடுவதையும் யாத்திராகமம் 40ம் அதிகாரத்தில் அக்கட்ளைப்படி மோசே அவர்களுக்கு அபிஷேகம் செய்ததாயும் எண்ணதிகாரம், உபாகமம் போன்றவற்றில் இவர்கள் பற்றியும் இவ்வாசாரியார்களுக்குரிய அதிகாரங்கள் மற்றும் தகைமைகள் பற்றியும் விவரித்திருப்பதையும் காண்பார்களாக.

 மேலும் லேவியர் 21ம் அதிகாரத்தில் இவர்களின் சந்ததியர் மட்டுமே தலைமுறை தலைமுறையாக ஆசாரியார்களாகத் தகுதி வாய்ந்தவர்கள் என்று குறிப்பிடவும் காணமுடிவது சிந்திக்கத்தக்கது. பொ.பி 1850களில் தமிழ் வழங்கும் பிரதேசங்களில் இந்துக்குருமார்கள் பூணூல், ருத்ராட்சம், வீபூதி முதலியனவுடன் வேதம் ஓதவதைக் கண்டு இகழ்ந்து கிறிஸ்துவ மிஷனரிமார்
“பிறந்த போது பூணூல் குடுமியும் பிறந்ததோ
பிறந்ததுடன் பிறந்ததோ பிறங்கு நூற்களங்கெலாம்
மறைந்த நாலு வேதமும் மனத்திலே உதித்ததோ
நிலம் பிளந்து வானிழிந்து நின்றதென்ன வல்லிரே” என்று பாடித்திரிந்தனர். இதைக் கேட்டு இந்தத்தமிழ்ப்புலவரான கார்த்திகேசப்புலவர் என்பார்

“உதித்த போது சட்டை தொப்பி தானும் கூடவுற்றதோ
மதித்த ஞானஸ்நானமும் வலிய வந்து நேர்ந்ததோ
விதித்த பைபிளானதும் கண் மெய்யுளத்துதித்தவோ
கதித்த பேச்சை விட்டு அநாதி கடவுளைக் கருதுமே” என்று பாடியதும் இங்கு நினைவிற் கொள்ள சுவாரஸ்யமானது.


ஆசௌசம் மற்றும் காணிக்கை செலுத்தல் போன்றன தேவையா?

   இந்துக்கள் இன்றைக்கும் தங்கள் வீடுகளில் பிறப்பு, இறப்பு என்பன ஏற்படும் போதும் பெண்கள் தமக்கு மாதவிலக்கு உண்டாகின்ற போதும் தீட்டு என்கின்ற ஆசௌசம் காப்பது வழமை. இதைக் கண்டு கிறிஸ்துவர்கள் மிகவும் பரிகசிப்பது வழக்கம். தீட்டைக் காட்ட முடியுமா? இயற்கை நிகழ்வை இப்படிக் கணிப்பது தகுமா? ஏன்றெல்லாம் வினாத் தொடுப்பது வழக்கம். இன்னும் ஒரு படி போய் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்றும் பெண்ணடிமைத்தனம் என்றும் கூட கூறிக்கொள்வார்கள். ஆனால்…

லேவியராகமம் 12ம் அதிகாரம் கூறுவது அப்படியே இங்கே தரப்படுவதை அவதானிக்குக..
“பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி (1) நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்யெது என்னவென்றால், ஒரு ஸ்திரி கர்ப்பவதியாகி ஆண்பிள்ளையைப் பெற்றால் அவள் சூதகஸ்திரி விலக்கமாயிருக்கும் நாள்களுக்குச் சரியாக ஏழு நாட்கள் தீட்டாயிருப்பாள்.(2) எட்டாம் நாளிலே அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோளின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படுவது(3) பின்பு அவள் அதன் பின் முப்பத்து மூன்று நாள் தன் உதிர சுத்திகரிப்பு நிலையிலேயிருந்து சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறுமளவும் பரிசுத்தமான யாதொரு வஸ்துவையும் தொடவும் பரிசுத்தமான ஸ்தலத்துள் வரவும் கூடாது(4) பெண் பிள்ளையைப் பெற்றாளாகில் அவள் இரண்டு வாரம் சூதகன்னியைப் போலத் தீட்டாயிருந்து பின் அறுபத்தாறு நாள் உதிர சுத்திகரிப்பு நிலையிலே இருக்கக்கடவளட(5) என்று மேலும் தொடர்ந்து விரிவாக கட்டளையிடப்பட்டுள்ளதைக் கவனிக்க வேண்டும்.

இதைப் போலவே இதே லேவியர் ஆகமத்தின் 15ம் அதிகாரத்திலுள்ள 19 தொடக்கம் 24 வரையான வசனங்கள் ருதமதியான பெண்மாதாந்தம் ஏழு நாட்கள் தீட்டாயிருப்பள் என்றும் அவளைத் தீண்டுகின்ற எவரும் அன்றும் சாயந்தரம் வரை தீட்டாயிருப்பர் என்றும் அது போலவே அவள் தொட்ட எப்பொருளும் தீட்டாயிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை விட இந்த லேவியராகமத்தின் 11ம் 12ம் 13ம் 14ம் 15ம் 21ம் அதிகாரங்களும் ஆசௌச விதி பற்றி மிக விளக்கமாகக் குறிப்பிடக் காணலாம்.

இந்துக்கள் திருக்கோயில்களில் திரவியங்களை அளித்து தமது பணம் யாவற்றையும் வழங்கி வழிபாடாற்றுவதைக் கண்டு கிறிஸ்தவ சமயிகளில் சிலர் இவர்கள் அறியாமையால் திக்குமுக்காடுவதாகச் சொல்லித்திரிகிறார்கள். ஆனால் யாத்திராகமத்திலும் எண்ணாகமத்திலும் கர்த்தருக்காக திரவியங்களையும் பொன், மணிகளையும் சமர்ப்பித்து போற்றியதாகக் கூறப்படக்காண முடிகின்றது.

புதிய ஏற்பாட்டில் கூட இதனைக் காணமுடியும். கிறிஸ்தவர்கள் கூறும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளாகவே “இயேசு அவனை நோக்கி, இதை நீ ஒருவருக்கும் சொல்லாத படி எச்சரிக்கையாய் இரு, ஆயினும் அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார்” (மத்தேயு. 8-4) என்ற வசனம் அமைந்துள்ளது.

 இதில் இன்னொன்றும் அவதானிக்கத்தக்கது. இயேசுவே தன்னிடம் வந்தோரை பழைய முறையை அனுசரித்து வாழுமாறே கட்டளையிட்டிருக்கிறார். ஆனால் கிறிஸ்தவர்களோ இயேசுவுக்குப் பின் பழையன செல்லாது என்று எப்படி முடிவு செய்தார்களோ? தெரியாது.

அடியாரும் ஆண்டவனும்

   இந்துக்கள் ஆழ்வாராதியரையும் நாயன்மார்களையும் அருளாளார்களையும் பெரியோரையும் போற்றி வழிபடுவதைக் கண்டு சிறு தெய்வ வணக்கம் என்றும் ‘நரஸ்துதி’ என்றும் அறியாமையில் சிலர் தூஷித்துத் திரிகிறார்கள். ஆனால் கிறிஸ்தவ வேதாகமத்தில் ஆதியாகமத்தில் ஆபிரகாம் தேவதூதர்கள் மூவரை பூமிக்கு நேராய்த் தாழ்ந்து வணங்கினான். என்ற செய்தியை நாம் பார்க்கிறோம். இதே போல
புதிய ஏற்பாட்டில் மத்தேயு 25ம் அதிகாரம் 40ம் வசனத்தில் கிறிஸ்துவின் வார்த்தையாகவே “சிறியவரான என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ..அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்” என்ற செய்தயை நாம் பார்க்கலாம். இவற்றினூடாக அடியார் வழிபாட்டை கிறிஸ்து ஏற்றுக்கொண்டார் என்றே கருதக்கிடக்கிறது.

  இது போலவே, இந்துக்கள் நாமஜெபம் செய்வதையும் ஒரே மந்திரத்தை மீள மீள ஜெபிப்பதையும் கண்டு இகழும் சில கிறிஸ்துவர்கள் தங்கள் புதிய ஏற்பாட்டில் மாற்கு, லூக்கா ஆகிய நற்செய்திகளில் கிறிஸ்துவின் நாமத்தின் மகிமையால் மட்டும் (விசுவாசமில்லாமலும் கூட) பிசாசுகள் ஓடின என்ற செய்தியை கவனிப்பார்களாக. இது போலவே இந்துக்கள் திருநீறு, திருமண், கோபி சந்தனம், குங்குமம், ருத்திராட்சம், துளசிமணி மாலை போன்றவற்றை அணிந்து கொள்வதைக் கண்டு பலவாறாகப் பரிகசிக்கும் தம்மைக் கிறீஸ்துவ நெறி பின்பற்றுவோர் என்று சொல்லிக் கொள்வோர் “பைபிளில் கிறிஸ்துவினதும் பேதுருவினதும் உடைகளைத் தொட்டவர்கள் கூட குணமடைந்தார்கள் என்றும் அவர்களின் அங்கங்களைத் தொட்டவர்கள் குணம் அடைந்தார்கள் என்றும்” இருப்பதைக் கவனிக்கக் கடவர். இந்துக்கள் அணியும் இப்புனிதப் பொருட்கள் அவர்களால் பகவானால் அணியப்பெற்ற அவனது அனுக்கிரகத்திற்குரிய சாதனங்கள் என்றே கொள்ளப்படுவது கவனிக்கத்தக்கது.


உங்களிடம் சில வினாக்கள்

இயல்பாகவே பைபிளைப் படிக்கிறவர்களிடம் ஏற்படக் கூடிய சந்தேகங்களே இவை. அதாவது மேற்குறிப்பிட்ட கர்த்தரின் நித்திய ஏற்பாடுகள் யாவும் கிறிஸ்துவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களால் ஏன் கடைப்பிடிக்கப்படுவதில்லை?

கிறிஸ்தவ மிஷனரிமார்கள் தற்போது “இயேசு கிறிஸ்து பாடுபட்டு மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்றும் எனவே இதன் பின்னர் பழைய ஏற்பாட்டு விஷயங்கள் பேணப்பட வேண்டிய அவசியம் இல்லை” என்றும் வேறு சொல்லிக் கொள்கிறார்கள். அவ்வாறாகில் இன்னும் பழைய ஏற்பாட்டையும் தாங்கள் பைபிளாகவே கொள்வதற்குக் காரணம் என்ன? என்று வினவும் போது “அது பழைய சம்பவங்களை அறிய மட்டுமே” என்கிறார்கள். இது இவ்வாறானால் இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் விருத்தசேதனம் மற்றும் பழைய ஏற்பாட்டு மரபுப் படியே ஓய்வு நாள் கைக்கொள்ளல் போன்றன நடைபெறக்காரணம் யாது? ஏன்பது வினவுதற்குரியது. இவற்றை கிறிஸ்துவானவர் தடுக்கவில்லை பதிலாக ஊக்கப்படுத்தி வளர்த்ததாகவே பைபிள் வசனங்கள் பேசுகின்றன.

மேலும் கர்த்தரானவர் தனது கட்டளைகளை மாற்றக்கூடாது, என்றும் நீக்கக்கூடாது என்று கட்டளையிட்டிருக்கிறார்.
ஆதியாகமம் 17ம் அதிகாரம் 7,12,13ம் வசங்கள்
யாத்திராகமம் 12, 28, 29,30,31,40ம் அதிகாரங்கள்
லேவியராகமம் 3,6,7,10,16,17,22,23,24ம் அதிகாரங்கள்
எண்ணாகமம் 10,19,28ம் அதிகாரங்கள்
         இவற்றிலே மிகவும் வலியுறுத்தி கர்த்தர் ஏற்படுத்திய நித்திய நியமங்களை ஒழுங்காகவும் பரம்பரை பரம்பரையாகவும் கடைப்பிடிக்க வேண்டும் என்றே சொல்லப்பட்டுள்ளது. இங்கு கிறிஸ்து என்பவர் பற்றியோ அவருக்குப் பின்னர் இவற்றை பேண வேண்யெதில்லையென்றோ கூறப்படவில்லை.

இவை தான் பழைய ஏற்பாடாச்சே என்று சொல்வீர்களாகில் புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர் என்ற ஆகமத்தில் 18,19,20,21ம் வசனங்களில் அப்போஸ்தலனாகிய பவுல் கர்த்தரின் பழைய ஏற்பாட்டின் பிரகாரம் தலைச்சவரம் செய்ததாயும் விழா எடுக்க முயன்றதாயும் கூறப்பட்டிருக்கக் காணமுடிகிறதே. ஆக, பவுல் ஏன் இவ்வாறு செய்தார்?

இதே அப்போஸ்தலர் என்ற ஆகமத்திலுள்ள 21ம் அதிகாரம் 26ம் வசனத்தைப் பாருங்கள்
“அப்பொழுது பவுல் அந்த மனுஷரை சேர்த்துக் கொண்டு மறுநாளிலே அவர்களுடனே கூடத் தானும் சுத்திகரிப்புச் செய்து கொண்டு தேவாலயத்தில் பிரவேசித்து அவர்களில் ஒவ்வொருவனுக்காகவும் வேண்டிய பலி செலுத்தித் தீருமளவும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேன் என்று அறிவித்தான்”

இவற்றினூடாக இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்குப் பின்னரும் அவருடைய சீஷர்கள் பழைய ஏற்பாட்டின் வண்ணமே செயற்பட்டதாய் அறியமுடியும். இது இயேசுவும் விரும்பியது என்றே பைபிள் மூலம் அறியலாம். ஆக, இன்றைய கிறிஸ்தவர்கள் தங்கள் மதநூலையே தாங்களே ஏற்றுக் கொள்ளவில்லையோ? ஏன்ற ஐயம் ஏற்படவே இது வழி செய்யும்.

இயேசு கிறிஸ்து நாதர் சொல்வது என்ன? “ பரலோகத்திலிருக்கின்ற என் பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே! என்று சொல்பவன் அதில் பிரவேசிப்பதில்லை.” (மத்தேயு -7-21) இதிலுள்ள ‘பிதாவின் சித்தம்’ என்ற சொல்லை பழைய ஏற்பாடு என்றே கருதவேண்டியிருக்கிறதல்லவா?  லூக்கா (6-48) என்னை ஆண்டவரே! ஆண்டவரே! ஏன்று நீங்கள் சொல்லியும் நான் சொல்லுகிற படி நீங்கள் செய்யாமற் போகிறதென்ன? என்று வேதனை தெரிவிக்கிறார். இது மட்டுமல்ல யாக்கோபு எழுதிய பொதுவான நிரபம் என்ற பகுதியிலும் 1ம் அதிகாரம் 22ம் வசனம்
“நீங்கள் உங்களை வஞ்சியாத படிக்கு திருவசனத்தை கேட்கிறவர்களாக மட்டுமல்லாமல் அதன் படி செய்கிறவர்களாயும் இருங்கள்” என்கிறது.

எனவே கிறிஸ்துவ சகோதர சகோதரிகளே! பைபிள் என்ற கிறிஸ்துவத்திருமறைக்கு முற்றும் விரோதமாய் காரியங்கள் செய்த கொண்டு ‘கிறிஸ்துவை விஸ்வாசிப்பவன் மட்டுமே பாவங்களிலிருந்து விடுபடுவான்’ என்று வீணே பிரச்சாரம் செய்து திரிவது கிறிஸ்துவானவருக்கே முற்றும் விரோதமல்லவா? இந்து தர்மத்தில் இருப்பதை எல்லாம் தூஷித்துத் திரிகிற உங்களில் சிலர் இதனை பிசாசு வணக்கம் என்றும் சொல்லுவது எவ்வளவு அறிவுடமை? ‘மதமாற்றம்’ என்ற ஒன்றையே மனதில் கொண்டு செயற்படுவதை விடுத்து எல்லாம் வல்ல இறைவனிடம் பரிபூரண சரணாகதி அடைவது மட்டுமே மேன்மையானது என்ற கருத்தை அறிமின். இந்துக்களின் திருக்கோயில்களுக்குச் செல்வது பாவகாரியம் என்றும் அங்கு தரப்படும் பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வது பாவம் என்றும் சில பாதிரிமார்கள் கிறிஸ்துவர்களைப் பயமுறுத்தி வைத்திருப்பது ஏன்?

 “உன் மனத்தை எனக்காக்கிடுக, என்னிடம் பக்தி வை, என்னை எய்தவாய், உண்மை இதுவே, ஆணையிட்டுச் சொல்கிறேன். எனக்கு நீ இனியன்” (பகவத்கீதை 18,65)
என்ற திருவார்த்தை எம்முள்ளத்தில் ஒளியேற்றட்டும்.

குறிப்பு- கிறிஸ்துவ சமயத்தைத் தூஷிப்பதை நோக்காகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்படவில்லை. இதன் மூலம் எவரேனும் மனவருத்தமுற்றால் மன்னித்துக் கொள்க. இயல்பாக பைபிளை வாசிக்கும் ஒருவனுக்கு உண்டாகும் சந்தேகங்களே இவையாகும். வெறுமனே நிதி திரட்டிக் கொண்டு ஏழைகளை ஈர்ப்பதையே நோக்காகக் கொண்டு மதமாற்றஞ் செய்வதிலேயே குறியாக இருக்கும் அன்பர்கள் இதனைக் கவனித்துக் கொள்வார்களாக.. அத்துடன் மேற்படி விஷயம் தொடர்பில் இக்கட்டுரை முழுமையானதல்ல என்பதையும் கவனிக்கவும்.

நீர்வை. தி.மயூரகிரி

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை