யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றிருக்கிறது.. வேறு எங்குமில்லாத வகையில், மேற்படி பல்கலைக்கழகம் ஒரு அரச நிறுவனமாக, இலங்கையிலுள்ள பதின்மூன்று பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகவே இருக்கின்ற போதிலும் இங்கு பட்டமளிப்பு விழா தோரணங்கள், மாவிலைகள், வாகைமாலைகள், நந்திக்கொடிகள் கட்டப்பெற்று கோலங்கள் வரையப்பெற்று நிகழ்வது வழமை.
வேந்தர் உபவேந்தர் உள்ளிட்ட யாவரும், மேள நாதஸ்வர இசைமுழங்க ஆலவட்டம் பட்டுக்குடை மரியாதைகளுடன் அழைத்து வரப்பெறுவதும் பல்கலைக்கழகத்துள் அமைந்துள்ள ஸ்ரீமத் பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலய வழிபாடுகளைத் தொடர்ந்து திருமுறை இசையுடன் ஒரு இந்துப் பண்பாட்டுத்திருவிழாவாக இது நடைபெறுவதும் சுட்டிக்காட்டத்தக்கது.
மேற்படி பல்கலைக்கழகம் சேர்.பொன்.இராமநாதனால் கட்டப்பட்ட பரமேஸ்வராக்கல்லூரியின் தரமுயர்த்தலால் உருவானது என்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ். பல்கலைக்கழகச் சின்னமாக சிவபெருமானின் வாகனமாகிய திருநந்தியெம்பெருமானின் சின்னமும் மங்கல விளக்கும் இணைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கழக மகுடவாசகம் “மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்பதாகும். கல்வி என்பது வெறும் உலக போகங்களுக்கானதல்ல… அது இறைவனைக் காண்பதற்கானது அதாவது மெய்ப்பொருளாகிய இறைவனை அடைவதற்குரியது. என்ற கருத்தை இது பிரதிபலிக்கக் காணலாம்.
இவ்வாண்டு இப்பல்கலைக்கழக பட்டமளிப்பு நடைபெற்ற ‘கைலாசபதி கலையரங்கு’ பண்பாட்டு அமைப்பை உள்வாங்கி புனரமைக்கப்பட்டு குளிருட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். சுமார் மூன்றாண்டுகளுக்குப் பின் நடைபெற்ற இந்நிகழ்வு பல்கலைக்கழக மாணவர்களிடம் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிகழ்வில் நல்லை ஆதீன குருமஹாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகளும் இந்துக்குருபீடாதிபதி பிரம்மஸ்ரீ. ஜ.மஹேஸ்வரக்குருக்களும் நேரில் பிரசன்னமாகி பட்டம் பெறும் மாணவர்களை ஆசீர்வதித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இப்பல்கலைக்கழகத்திலேயே முதன்முதலாக பேராசிரியர்.கலாநிதி.பிரம்மஸ்ரீ. .கா.கைலாசநாதக்குருக்கள் அவர்களால் “இந்துநாகரிகத்துறை” உருவாக்கம் செய்யப்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. மேற்படி துறையில் தற்போது வருடாந்தம் ஏராளமான பட்டதாரி மாணவர்கள் உருவாகி வருகின்றனர். இம்முறை சைவசிந்தாந்த முதுகலை மாணிப்பட்ட நெறியும் உருவாக்கப்பட்டு அதில் முதற்பிரிவு முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளது.
பல்கலைக்கழக திருக்கோவிலைச் சார்ந்து இராமநாதன் வேதாகம ஆய்வு நிறுவனம் இயங்குவதும் பல்கலைக்கழகத்துள் “சமஸ்கிருதத்துறை” இருப்பதும் குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழகத்துடன் இணைந்த நிறுவனமாக இராமநாதன் நுண்கலைப்பீடம் இயங்கி நமது சாஸ்திரிய ஸங்கீதத்தையும் நடனத்தையும் வளர்த்து வருகிறது. இதே போலவே ஊடகப்பயிற்சி நிலையமும் இருக்கிறது.
இலங்கையின் பெருமதங்களான பௌத்தம் கிறிஸ்தவம் ஆகியவற்றைச் சேர்ந்த குருமார்கள் தம் மார்க்கக் கல்வி கற்று பட்டம் பெற்று கொள்ள வசதியாக அம்மதங்கள் சார்ந்து பல்கலைக்கழகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனங்களுடாக கலாநிதிப்பட்டம் வரை கூடப் பெற வசதியுள்ளது. உதாரணமாக கிறிஸ்தவர்கள் இதை “இறையியல் கல்லூரி” என்றும் கூறுவர். ஆனால் இந்துக்குருமாருக்கு அவ்வாறான வசதியேதும் இல்லை. என்பதும் கோயிலுக்குப் போய் “அரோஹரா” சொல்லுகிற இந்துக்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். எனவே இந்துப்பண்பாட்டை ஓரளவேனும் பேணிக்காக்கிற இப்பல்கலைக்கழகத்தின் செயலை இந்த வகையில் மெருகூட்ட முயல வேண்டும். சிந்திப்பீர்களா………..? செயற்படுவீர்களா….?
எழுத்து :-
தி.மயூரகிரி - நீர்வேலி
தி.மயூரகிரி - நீர்வேலி