அறிந்து கொள்வோம் நம் ஆன்மீகத்தலைவர்களை….
செம்மைவழி காட்டிய செல்லத்துரைசுவாமிகள்
ஒரு சில கசப்பான சம்பவங்களையடுத்து இந்துக் குருமார்கள், இந்துத்துறவிகள் மீது கண்டபடி குற்றம் சுமத்த இந்துவிரோதிகளும் மதமாற்றச் சக்திகளும் மதங்களுக்கு எதிரான நாத்தீகவாதிகள் சிலரும் வருமானத்தையே ஒரே குறிக்கோளாகக் கொண்ட மீடியாக்களைச் சேர்ந்த சிலரும் தமிழகத்திலும் இலங்கையிலும் முனைப்போடு ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையிலேயே யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘வலம்புரி’ நாளிதழ் 05.03.2010 அன்று தனது ஆசிரியத்தலையங்கத்தில் ‘இந்து மதத்திற்கு எதிராக திட்டமிட்ட முறையில் சதித்திட்டங்கள் இடம்பெறுவதாகவே கருதவேண்டியிருக்கிறது’ என்று கருத்துத் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த ஒரு சிலர் இந்துத்துறவி வேடம் பூண்டு மக்களை ஏமாற்றியிருக்கலாம். ஆனால் காலகாலமாக நம்மிடையே உயரிய துறவிகள் அதிபரிசுத்தராக உலவியிருக்கிறார்கள். இன்றைக்கும் அவ்வாறான பல துறவற உத்தமர்கள் இந்த உலகில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை விவரிக்க வேண்டிய அத்தியாவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது.
இந்த வகையில் மிக அண்மையில் நம்மோடு வாழ்ந்த நாம் கண்ணாரக் கண்ட யாழ்ப்பாணத்துத் துறவரசர் ‘சிவத்தொண்டன் ஸ்ரீமத் செல்லத்துரை’ சுவாமிகளாவார். அன்னாருடைய 04வது ஆண்டு குருபு+ஜைத் திருநாளும் வரும் பங்குனிப்பபூரணையில் வரும் நிலையில் சுவாமிகளைப் பற்றிச் சிந்திப்பது பொருத்தமான ஒன்றாயிருக்கும். என்று கருதுகிறோம்.
நீர்வேலியூரில் வரலாற்றுச்சிறப்புடைய அரசகேசரிப் பெருமானின் அருளாட்சி நிறைந்த பகுதியில் 1914ல் ‘ஆனந்தம்பிள்ளை’ என்ற இயற்பெயருடன் பிறந்த சுவாமிகள் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் கல்விகற்று ஆங்கிலம், தமிழ்,சமஸ்கிருதம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் பயிற்சி பெற்றதுடன் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக்கலாசாலையில் ஆசிரிய பயிற்சியும் பெற்று தென்னிலங்கையில் ஆசிரியப்பணி புரிந்தார்.
நல்லாசிரியனாயிருந்த சுவாமிகள் பிரம்மச்சாரியத்தையும் உறுதியோடு பேணிவந்தார். இந்த நிலையிலேயே யோகர் சுவாமியை ஒருமுறை கொழும்பில் சந்தித்தார். அப்போது யோகர் பெருமான் நம் செல்லத்துரை(சுவாமிகள்) அவர்களிடம் ‘நீ உன்னை அறிந்திருப்பதை விட நான் உன்னை நன்கறிவேன்’ ( I know you man better than you know you) என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டார். அப்போது செல்லத்துரை தமக்கிருக்கும் துறவற நாட்டத்தை வெளிப்படுத்தினார். யோகரோ ‘தம்பிமாரே இப்போது உத்தியோகத்தை மாத்திரம் விட்டு விடாதீர்’ என்று கண்டிப்பாக அறிவுறுத்தி ஆசீர்வதித்தார். அப்போது செல்லத்துரை அவர்கள் நுவரெலியாவில் இறாகலையில் ஒரு கல்லூரி முதல்வராக இருந்தார்.
எனினும் தொடர்ந்தும் செல்லத்துரை அவர்கள் விடுமுறை நாட்களில் யோகர் சுவாமிகளிடம் ஆன்மீக சாதனை பெறுவதும் கதிரமலையிலும் செல்வச்சந்நதியிலும் நல்லூரிலும் தியானம் செய்வதும் தொடர்ந்தது. இக்காலத்தில் பல அரிய ஆன்மீக அனுபவங்களை செல்லத்துரை சுவாமிகள் பெற்றிருக்கிறார்.
செல்வச்சந்நதியில் ஓரு நாள் தியானம் செய்த போது செல்லத்துரை அவர்களுக்கு ‘கடவுள் வழிபாடு என்பது சில வேளை முன்னோர் வழிவந்த மூடப்பழக்கமா? கற்பனை தானா?’ என்ற எண்ணம் உருவாயிற்று. இந்த வேளையில் ஒரு மனிதன் அருகில் தாங்கொணாத வலியால் துடிதுடித்து விழுந்து அழுது புலம்பிக்கொண்டிருந்தது தெரிந்தது. உடனே அவரது வலியை இப்பொழுதே போக்க முடியுமாகில் அது கடவுள் உண்மைக்கு கண்கண்ட சாட்சியாயிருக்கும் என்ற எண்ணப்பாங்குடன் சந்நதியானுடைய தீர்த்தக்குளத்தில் கைப்பிடி நீரெடுத்து அந்த நோயாளியருகில் சென்று குடிக்குமாறு கொடுத்தார். சற்று நேரத்தில் அந்த நோயாளி செல்லத்துரை சுவாமிகளின் காலில் விழுந்து ‘தான் நீண்ட காலமாய் தீராத வயிற்று வலியால் மிகுந்த அவதிப்பட்டதாயும். தங்கள் அருளால் இப்போது பூரணசுகம் பெற்றேன்’ என்றும் போற்றினார். இது பொல இக்காலத்தில் பல ஆத்மீக அனுபவங்கள் செல்லத்துரைக்குக் கிட்டிற்று.
இறை இன்பத்தைத் தேடி பாரதம் முழுவதும் யாத்திரை செய்தார் சிதம்பரத்தில் சிவகாமிஅம்பாள் ஆலயத்துள் பிள்ளையார் சந்நதியில் வழிபாடாற்றிய போது ஆச்சரியமாக ஒரு பெண் விநாயகருக்குப் பூஜை செய்து மோதகப்பிரசாதமும் வழங்கி மறைந்தார் (சிதம்பரத்தில் பெண்கள் கருவறையுள் செல்வதில்லை என்பதுடன் பூஜை செய்வதுமில்லை) தனக்கு அவ்வாறு அருளியவர் சிவகாமித்தாயாரே என்று அறிந்து மனம் நெகிழ்ந்தார்.
.ரமணாச்சிரமத்தில் சில காலம் தங்கியிருந்து பின்னர் பனி நிறை திருமலையான இமயமலைச்சாரலில் தவம் செய்யச் சென்றார் அங்கே ஒரு நாள் நேரடியாகக் காட்சியளித்த யோகர்சுவாமிகள் ‘come home immediately’ (உடனே வீட்டிற்கு வா) என்று ஆணையிட்டு மறைந்தார் இதனால் யோககுருநாதன் கட்டளைப்படி யாழ்ப்பாணம் வந்து யோகர்சுவாமிகளைச் சந்திக்க கொழும்புத்துறை சென்றார். இவரின் வரவை எதிர்பார்த்து இருந்த யோகர் “சிவத்தொண்டனுக்கு நல்ல ஆள்” என்று கூறி பேரன்போடு வரவேற்றார்.
இக்காலத்தில் யோகர் பெருமானின் திருமுன்றலில் செல்லத்துரை ஆன்மீகத்தில் வளர்ந்து வந்தார்.
‘நல்ல குருநாதன் நம்மை வருத்துவது கொல்லவல்ல கொல்லவல்ல
பொல்லா வினைகள் போக்குதற்கே’
என்பதையுணர்ந்து கல்லூரி அதிபராய் சமூகமதிப்புப் பெற்றிருந்த சுவாமிகள் சுவாமிகளின் கட்டளையை தலை தாங்கி சிறுதுண்டு இடையுடுத்தி வீதியில் பிச்சை ஏற்கவும் தயங்காத குருபக்தி மிக்கவராய் விளங்கினார்.
சிலகாலத்தில் செல்லத்துரையின் பற்றும் பாசமும் பந்தமும் அகற்றி ‘ஸந்நியாசதீட்சை’ அளித்த யோகர் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்புச் செங்கலடியிலும் உள்ள சிவத்தொண்டர் நிலையங்களுக்குப் பொறுப்பாகவிருந்து பாத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இக்காலத்தில் செல்லத்துரை சுவாமிகள் நிலையத்திலிருந்து மாதம் தொறும் வெளியாகிற ‘சிவத்தொண்டன்’ இதழுக்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் அரிய பெரிய கட்டுரைகள் எழுதி வந்ததுடன் மொழிபெயர்ப்பு முதலாய பணிகளிலும் ஈடுபட்டார். அரசருள் அரசராய் ஆண்டியுள் ஆண்டியாய் ((a king of the king beggar of begger) வாழ்ந்து காட்டினார்.
சமயப்பணிகளுக்கு அப்பால் சமூகப்பணிகளிலும் ஈடுபட்டு வந்த சுவாமிகள் மிகுந்த எளிமையானவர். புகழுரையை சிறிதும் விரும்பாதவர் இவரிடம் பல ஸ்ரீராமகிருஷ்ணமிஷன் துறவியரும் கிறிஸ்தவ அருட்தந்தையர்களும் மிக மரியாதையோடு வந்து ஆன்மீகம் பற்றிப் பேசி மகிழ்வர்.
தன்னைப் பற்றி பிரபலம் செய்ய இவர் எவருக்கும் அனுமதி தரவில்லை. 2002லிருந்து யாழ்ப்பாண சிவதொண்டர் நிலையத்திலேயே நிலையாய் அமர்ந்து ஆன்மீக அலை பரப்பிய இவ்வருள் முனிவர்தமது 92வது வயதில் 2006ல் சிறிது சுகவீனமுற்றார். தான் சமாதியடைய முன்னைய நாள் சுகவீனமுற்று படுக்கையிலிருந்த போதும் தன்னருகிலிருந்தோரிடம் சிரித்தவாறே ‘பக்கத்திலிருந்து எதால உயிர் போகுது எண்டு பாக்கனும்’ என்று நகைச்சுவையோடு மரணத்தை விளையாட்டாகக் கருதிக் கூறினார்.
பங்குனி மாதம் முழுமதிநாளில் அத்தத்திருநாளில் சமாதிநிலை பெற்றார் சுவாமிகள். எனினும் இன்னும் சாவா மூவாச் சிங்கமாக சற்குருவாய் நின்று எல்லோரையும் நல்லாற்றுப்படுத்தி அனுக்கிரகிக்கிறாhர் சீர்வளார்சீர் செல்லத்துரை சுவாமிகள்
செல்லத்துரை சுவாமிகள் தமது இறுதிக்காலத்தில் அடிக்கடி நீர்வேலி அரசகேசரியானின் திருக்கோவிலுக்கு வந்திருக்கிறார்கள். பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருக்கிறார்கள். சுவாமிகளைத் தம் சத்குருநாதராக ஹிருதயத்தில் வைத்து பல நீர்வேலி அன்பர்கள் வழிபாடாற்றி வருவதும் கூற வேண்டியதே.
சுவாமிகள் நம்மையும் நல்வழிப்படுத்த அவர் பாதம் இறைஞ்சுவோம்.
பல்லவி
வழுக்கி வழுக்கிச் சென்றவென் மனத்தை
இழுத்து இழுத்து இரட்சித்த யோகனே
சரணங்கள்
ஏங்கித் திரிந்த என்இன்னல்கள் போக்கினாய்
ஓங்கியுயா்ந்தவோர் இன்னொளியாயினாய்
தூங்கிக் கிடந்த தூசு துலக்கினாய்
தாங்கினாய் அடியேனையும் தஞ்சமாய் (வழுக்கி)
ஒழுக்கம் உற்றவர் ஓம்பிடும் ஒருவா
ஒழுக்கம் அற்றவன் ஓம்பலும் பொறுப்பாய்
பழுத்த மனத்தரைப் பாலிக்கும் பண்பாய்
உழுத்த மனத்தனை ஓம்புவாய் உன்பால் (வழுக்கி)
வளர்ந்த குழந்தையாய் வாழ்ந்திடும் வம்பனை
தளர்ந்திடாதென்றும் தாங்கிடும் சம்புவே
அளந்தறிந்திட அரியதோர் நம்பனே
உளம் தனிலுறை ஒண்சுடர் செம்பொனே (வழுக்கி)
-சிவசிந்தனை-
வழுக்கி வழுக்கிச் சென்றவென் மனத்தை
இழுத்து இழுத்து இரட்சித்த யோகனே
சரணங்கள்
ஏங்கித் திரிந்த என்இன்னல்கள் போக்கினாய்
ஓங்கியுயா்ந்தவோர் இன்னொளியாயினாய்
தூங்கிக் கிடந்த தூசு துலக்கினாய்
தாங்கினாய் அடியேனையும் தஞ்சமாய் (வழுக்கி)
ஒழுக்கம் உற்றவர் ஓம்பிடும் ஒருவா
ஒழுக்கம் அற்றவன் ஓம்பலும் பொறுப்பாய்
பழுத்த மனத்தரைப் பாலிக்கும் பண்பாய்
உழுத்த மனத்தனை ஓம்புவாய் உன்பால் (வழுக்கி)
வளர்ந்த குழந்தையாய் வாழ்ந்திடும் வம்பனை
தளர்ந்திடாதென்றும் தாங்கிடும் சம்புவே
அளந்தறிந்திட அரியதோர் நம்பனே
உளம் தனிலுறை ஒண்சுடர் செம்பொனே (வழுக்கி)
-சிவசிந்தனை-
( சுவாமிகளின் இவ்வாண்டுக்கான குருபபூஜை 29.03.2010 பூரணைதினத்தன்று நீர்வையூர் பக்தர்களாலும் மட்டக்களப்பு செங்கலடி மற்றும் யாழ்.வண்ணார்பண்ணை சிவத்தொண்டன் நிலையங்களிலும் பக்திபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது)
எழுத்து
நீர்வை மயூரகிரி. செம்மைவழி காட்டிய செல்லத்துரைசுவாமிகள்