Tuesday, November 10, 2009

விநாயகர் பிறந்த கதை.


உண்மையில் விநாயகர் அவதரித்த திதியையே (அவர் அவதரித்த தினம்) விநாயக சதுர்த்தி எனக் கொள்ளப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. ஒருமுறை சிவபிரான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச் செல்வதற்கு எண்ணினார். அப்போது தனக்குக் காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் சமைத்துத் தமது அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார்.
அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது. எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்திவிட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்றுவிட்டார். அச்சமயத்தில் மீண்டுவந்த சிவபிரானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் சினங்கொண்ட சிவபிரான் பிள்ளையாரின் சிரத்தை அரிந்துவிட்டு உள்ளே சென்றுவிடார். நீராடி முடிந்ததும் தேவியார் வெளியே வந்து, பிள்ளையார் சிரச்சேதமுற்றுக் கிடந்த கோலத்தைக் கண்டு சீற்றங்கொண்டார். தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்துவிட்டதை அறிந்த அவர் ஆவேசங் கொண்டவராக காளியாக உருக்கொண்டு வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார்.
காளியின் ஆவேச நர்த்தனத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர். காளியைச் சாந்தப்படுத்துவதற்கு சிவன் எண்ணி, தனது கணங்களை அழைத்து ‘வடதிசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் கொய்து வருமாறு பணித்தார். பணிப்பின் பிரகாரம் கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையைக் கொய்து சென்று இறைவனிடம் கொடுக்கவும், அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பார்வதியின் பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டிவிட்டார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக்கொண்டார். சிவபிரான் அந்தப் பிள்ளையாருக்கு “கணேஷன்” என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு கணாதிபதியாகவும் நியமித்தாரென ‘நாரத புராணத்தில்’ தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே பிள்ளையாரின் அவதார சரிதம். அது சம்பவித்தது ஆவணி மாதத்து சுக்கில பட்ஷ சதுர்த்தியன்றாகும். அன்றிலிருந்து அத்தினம் இந்து மதத்தின் உயர்வான ஒரு புனித தினமாக ஆகிவிட்டது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை