Wednesday, November 04, 2009

வரலாறு

நீர்வேலிக் கிராமத்திதன் நடுநாயகமாகவிளங்கி அருள்பாலித்துக் கொண்டிருப்பதே அரசகேசரிப் பிள்ளையார் ஆலயமாகும். செம்மண் பிரதேசத்தில் அமைந்தால் இவ்வாலயத்தைச் செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் என்றும் வழங்குவதுண்டு.
யாழ்ப்பாண இராச்சியத்தை அரசாட்சி செய்து வந்த தமிழ் அரசர்கள் நல்லூரில் இராசதானி அமைத்ததோடு நல்லூரில்லிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தின் பலபாகங்களுக்கும் போக்குவரத்து செய்வதற்கான வீதிகளையும் அமைத்தனர்.
இந்தவகையில் நல்லூரிலிருந்து இருபாலை, கோப்பாய், நீர்வேலி ,சிறுப்பிட்டி, நவக்கிரி ஆகிய கிராமங்களுக்கூடாக அச்சுவேலிக்குச் செல்லும் வீதி அமைகின்றது. இதனாலேயே இந்த வீதி “இராச வீதி” என்று அழைக்கப்படுகின்றது.
அக்காலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தை அரசாட்சி செய்த பாராஜசேகரனின் இளையமகனான பண்டாரம் மன்னனின் முதன் மந்திரியாக இருந்த அவரது மாமனாரான அரசகேசரி என்பவர் இந்த இராசவீதி வழியிலே ஒரு விசேடமான இடம் இருப்பதாகவும், அந்த இடத்தில் ஒரு தான் தோன்றியான தீர்த்தம் இருப்பதாகவும் கனவு கண்டார்.
அடுத்த நாளே அதைப்பற்றி ஆராயும் பொருட்டு தான் கனவு கண்ட இடத்துக்கு வந்து ஆராய்ந்தபோது தான் கண்ட கனவின்படி அங்கு புனிதமான அந்த நீரூற்றைக்கண்டு வியந்து அதிசயப்பட்டார். அந்த ஊற்றிலிருந்து வெளிப்படும் தீர்த்தமானது அமிர்தம் போலவும், நல்லநீர்ப் பெருக்கோடும் இருப்பது கண்டு ஆனந்தப்பட்டார்.
இவ்வாறு தீர்த்த அமைப்புள்ள இடத்தில் ஆலயம் அமைப்பதே அரசமரபு எனக்கருத்திற்கொண்டு அப்புண்ணிய தீர்த்தத்தை திருமஞ்சனமாகக் கொண்டு ஒரு விநாயகப்பெருமானுக்குரிய ஆலயமமைத்து பிரதிஷட்டை செய்தார். அரசகேசரி என்ற மந்திரியால் 16 ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டதால் இவ்வாலயம் அரசகேசரிப் பிள்ளையார் கோவில் என வழங்கப்படலாயிற்று. இவ்வாலயம் மிகவும் புராதனமான ஓர் ஆலயம் என்பதற்கு மிகப்பழைய புராதன ஆலயங்கள் என்ற பதிவேட்டில் இவ்வாலயத்தின் பெயரும் பதிவாகியுள்ளமை ஒரு சான்றாகும்.

போர்த்துக்கீசரின் வருகையை அடுத்து அக்காலத்தில் சைவக்கோயில்கள் அழிக்கப்பட்டதும், சைவ அநுட்டானங்கள் ஒதுக்கப்பட்டதுமான ஒரு நிலை உருவானது. அந்தக்காலகட்டத்தில் இக்கோயிலும் பாதிக்கப்படலாமெனக்கருதி பயந்த ஊர்மக்கள் பிரதிஷ்டை பண்ணப்பட்ட விக்கிரகத்தை திருமஞ்சனக் கிணற்றுக்குள் மறைத்து வைத்தார்கள். பின்னர், குறித்த கிணற்றிலிருந்து விக்கிரகம் எடுக்கப்படும்போது பிள்ளையாரின் தும்பிக்கை சேதமுற்றிருந்தது எனவும் ஒரு கதை உண்டு.
தற்போது இவ்வாலயத்தில் புதிதாகத் தருவிக்கப்பட்ட விநாயகர் விக்கிரகமே பிரார்த்தனைக்கு உண்டு. புராதனம் மிக்க இவ்வாலயத்தை 1800 ஆம் ஆண்டு தொடக்கம் நீர்வேலியைச் சேர்ந்த கதிர்காமர் ஐயம்பிள்ளை என்பவர் பரிபாலித்து வந்திருக்கிறார்.


1873 கார்த்திகை 26 ஆம் திகதி பிரசித்தநொத்தாரிஸ் வே.சங்கரப்பிள்ளை முன்னிலையில் ஆலயத்தின் பரிபாலனப்பொறுப்பு சுவாமிநாதக்குருக்களின் மகன் இராமசாமிக் குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
1904 ஆம் ஆண்டு பங்குனி 7 ஆம் திகதி பிரசித்த நொத்தாரிஸ் சங்கரப்பிள்ளை முகதாவில் 7 பேரடங்கிய குழுவினரால் பராமரிப்புத்தத்துவம் ஒன்று எழுதப்பட்டது. 1906 ஆம் ஆண்டு ஆவணி மாதம் கோயிலின் பூசகர் சுவாமிநாதக் குருக்களின் மகன் இராமசுவாமிக் குருக்களுக்கு பராமரிப்புத்தத்துவம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.


1949 இல் இருந்து புதிய சகாப்தம் உருவானது 6 பேரைக்கொண்ட தர்மகர்த்தாசபை உருவாக்கப்பட்டது அதன்பின் தர்மாகர்த்தாசபை உறுப்பினர் தொகை 12 ஆக அதிகரிக்கப்பட்டது. இன்னும் காலத்துக்குக்காலம் குறிப்பிட்ட திருப் பணிகள் செய்து நிறைவேற்றப்படுவதற்கு திருப்பணிகள் செய்து நிறைவேற்றப்படுவதற்கு திருப்பணிச்சபைகளும் நிறுவப்பட்டன.
இவ்வாலயத்தில் மூலமூர்த்தியாகப் பிள்ளையாரும் அதற்கொப்ப சிவன்,அம்மன் மூர்த்தங்களும், ஸ்ரீவள்ளி, ஸ்ரீதேவசேனா சமேத முருகப்பெருமானும், நவக்கிரகமும் தெட்சணாமூர்த்தியும், துர்க்காதேவியும், சண்டேசுவரர் ஆலயமும் ஸ்தம்ப பிள்ளையார், சந்தான கோபாலர், நாகதம்பிரான் ஆகிய மூர்த்தங்களுக்கும் தனித்தனி சந்நிதானம் அமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இவ்வாலயத்தின் வடக்கு தெற்கு பக்கங்களில் நந்தவனங்களும் தெற்குப்பக்கத்தில் தீர்த்தக்கேணியும் அழகிய மண்டபமும் அமைந்துள்ளமை ஆலயச்சிறப்பிற்பு மேலும் மெருகூட்டுவதாக அமைந்துள்ளனவாகும்.

இந்தியாவிருந்து வரவழைக்கப்பட்ட சிற்பாசாரியர்களின் கைவண்ணத்தில் 27-01-1964 இல் ஆரம்பிக்கப்பட்டு உருவாக்கப்பட்டதே பிள்ளையாருக்குரிய அழகிய சித்திரத்தேராகும். இன்னும் தேர்க் கொட்டகையும் அமைக்கப்பட்டதோடு முருகப்பெருமானுக்குரிய சித்திரதேர் 1992 இல் உள்ளுர் சிற்பாசாரியர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டதோடு 3 ஆவது சித்திரத்தேராக சண்டேஸ்வரப்பெருமானுக்கும் ஒரு சிறிய சித்திரத்தேர் உருவாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாலய நித்திய, நைமித்திய கைங்கரியங்களைப் பரம்பரை பரம்பரையாக சிவஸ்ரீ கார்த்திகேச சாம்பசதாசிவக் குருக்களும் அவர் புத்திரர் சோமதேவாக் குருக்களும் வேதாகம முறைப்படி செய்து வருவது சிறப்புடைத்தாகும்.
இவ்வாலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆவணிப்பௌர்ணமியைத் தீர்த்தோற்சவமாகக் கொண்டு முதல் ஒன்பது நாள் மகோற்சவமும் நடைபெறுவதோடு பூங்காவன உற்சவமும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிவாராத்திரி திருவெம்பாவை, நவராத்திரி என்பனவும் மாதாந்த சதுர்த்தி திருவிழாக்களும், புராட்டாதிச்சனி நவக்கிரக அபிஷேகம், ஐப்பசி வெள்ளி, கார்த்திகைச் சோமவாரம், திருக்கார்த்திகை, ஆனி உத்திரம், ஆவணி மூலம் என்பனவற்றிற்கு உற்சவங்களும் பிள்ளையார் கதை, கந்தபுராண படனம், பெரியபுராணம், திருவாதவூரடிகள் புராணபடனம் என்பனவும் காலத்துக்குக்காலம் சமய பிரசங்கங்களும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. வருடந்தோறும் விநாயகர் சஷ்டிக்கு 21 நாளும் பெருங்கதைப்படிப்பும் லட்சஅர்ச்சனையும் நடைபெற்று வருகின்றது. விநாயகர் சஷ்டி இறுதிநாளில் கயமுகன் போர் நடைபெறுகின்றது.

மகுடாசூர சம்மாரத்திற்காக விநாயகப் பெருமான் மாசுவன் ஸ்ரீ மீனாட்சி அம்பாள் கோயிலுக்கு எழுந்தருளி வருவது கிராமத்துக்கே பெருமைதரும் ஒரு நிகழ்வாகும். மேலும், இவ்வாலயத்தில் வளர்பிறைச்சதுர்த்தி உற்சவம் மட்டுமன்றி அபரபக்க சங்கட சதுர்த்திக்கும் மாதந்தோறும் இரு சதுர்த்திவிழாக்கள் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்.
இன்னும் இலங்கைக்கு வருகைதந்த தமிழக கலைஞர்கள் கே.பி.சுந்தராம்பாள் காரைக்குறிச்சி அருணாசலம், கி. வா. ஐகநாதன், குன்றக்குடி அடிகளார் போன்றோர் இக்கோயிலுக்கு வருகைதந்ததும் சிறப்பு அம்சங்களாகும். இற்றைக்கு 200 வருடங்களுக்கு முன் வாழ்ந்த அரிஅரிவட்டார் என்னும் பெரியாரால் பாடப்பெற்ற வசந்தன் காப்புப்பாடலில்,
“வார்பூத்த கொங்கைமலை தங்கை தந்த
வள்ளல் வயல் நீர்வேலி வாழும் மூர்த்தி
ஆர்பூத்த சடை அரசகேசரிப் பேர்
அத்திமுகப்பிள்ளை மலரடி காப்பாமே”

என இப்பிள்ளையாரின் அருள் வேண்டிப் பாடியுள்ளமை கவனிக்கவேண்யதாகும். நாளும் விநாயகரின் பேரருளை வேண்டுவோமாக.
இவ்வாலயத்தைப் பற்றி அரசாங்கப் பதிவேட்டில் உள்ள விபரம்
ஆலயம் கட்டப்பட்ட காலம்: 1792
ஆலயப் பெயர்: அரகேசரிப்பிள்ளையார் கோயில்.
இருக்குமிடம்: நீர்வேலி தட்டுப் பகுதி (காணிப் பெயர்)
யரால் கட்டப்பட்டது: அவ்வூர் மக்களால் கட்டப்ட்டது.
இப்போ நிர்வகிப்பவர்: குமருப்பிள்ளை சுவாமிநாத விசு
விழா நடைபெறும் மாதம்,விபரம்: ஆவணி 9 நாட்கள் சுவாமியைக் காவி வீதி வலம் வருதல் ஒரு நாள் தேர்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை