Tuesday, November 24, 2009

இணையற்ற கணபதி இணையத்தில்

தகவல் தொழில் நுட்பங்களின் வளர்ச்சி உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் புகுந்து தனது வேலையை காட்டிக்கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில் விஞ்ஞானத் துறை சார்ந்ததுதான் இத்தொழில் நுட்பங்கள் என்பது மாறி இலத்திரனியல் ஊடகத்தின் பிறிதொரு பரிமாணமாக பல்வேறுபட்ட வசதிகளை உள்ளடக்கியதாக இலக்கியம், ஆன்மீகம், போன்ற பலதரப்பட்ட பிரிவுகளையும் தன்னகத்தே இணைத்துப் பயணிக்க இணையமும் அதன் வடிவமைப்பாளர்களும் இறங்கி பல காலங்களாகப்போகின்றன. உலகம் என்பதும் அதன் வளர்ச்சி, அது எந்தெந்த காலத்தில் எப்படி எப்படி இருக்கவேண்டும் என்பதும் அந்தப்பரம்பொருளால் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டாலும் அதற்கான வேலைத்திட்டங்களிலும் முயற்சிகளிலும் மனிதம் எப்போதுமே தோற்றுவிடாது முன்னேறிக் கொண்டிருக்கிறதெனலாம்.

உலக அரங்கிலே என்று பார்க்கின்றபோது, நாமும் எமது மொழியும் மதமும் தனக்கென ஒரு இடத்தை நாட்டியுள்ளதென்பதானதும்: ஆங்கிலேயருக்கும் இஸ்ரேலியருக்கும் அடுத்ததாக இணையத்தில் இடம் பிடித்திருப்பது தமிழர்களின் தமிழ் என்பதாலும் நாமும் நம்மை சார்ந்தவைகளும் பகுத்தறிவுத்தன்மைமிகு - காத்திரமான நாகரிகத்தை கொண்ட ஒன்றை பின் பற்றுகிறோம் என்கிற தாழ்வுணர்ச்சியற்ற பெருமைக்குரிய விடயத்தையும் இங்கே சுட்டிக்காட்ட வைக்கிறது. இந்தவகையிலே சைவ பண்பாட்டு விழுமியங்களுக்கும், தமிழ்க்கலாசாரத்திற்கும், வேளாண்மைக்கும் புகழ்பெற்ற நமது நீர்வைப்பதியும் அதன் தூண்களான மக்கள்கூட்டமும் இன்று உலகெங்கும் வியாபித்து அனைத்துத் துறைகளிலும் எமது ஊரின் - மொழியின் - மதத்தின் - சமூகத்தின் பெயர்களைப்பொறித்த வண்ணமுள்ளனர். அந்த வகையிலே எமது ஊரின் பெயரிலும் ஊரிற்காகவும் பல்வேறுபட்ட இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு அதிற்சில மிகச் செயற்றிறனுடனும் இயங்கிக்கொண்டிருப்பது மகிழ்ச்சிக்கும் பாராட்டுக்குமுரியதாகிறது. இந்த இடத்திலே அரசகேசரிப்பிள்ளையாரின் பெயரிலும் ஒரு இணையத்தை உருவாக்கி கொண்டுசெல்ல ஊரின்பாற் பற்றுமிகு இளைஞர் சிலரிற்கு பிள்ளையாரின் திருவருள் கைகூடியிருப்பதும், இக்கைங்கரியத்திற்கு இன்னும் கணபதி நல்லருள்பாலிப்பான் என்பதும் அவர்தம் நம்பிக்கையாகும்.
எதற்கு?
இங்கே இவையனைத்தும் ஏன் எதற்கென்ற கேள்விகளுக்கு தெளிவுபடுத்தவேண்டிய பொறுப்பு எமக்குண்டு அத்தோடு மழைக்கு முளைக்கின்ற காளான்களாக இருந்து விடக்கூடாதென்ற உங்களின் ஆதங்கத்திற்கும் உங்களின் ஒத்துழைப்பும் ஊக்கமும் தான் எங்களின் பதிலாக அமைகிறது. ஆம்! உலகின் எந்த மூலைக்கு எத்தனை கடல் தாண்டிச்சென்றாலும் “எங்கண்டை" என்கிற உணர்வு அனைவரையும் வலிமைமிக்க காந்த சக்தியாக நமது மண்ணிற்கு இழுத்துவந்து விடுகிறது. அதன் ஒரு விளைவாகவும், உலகின் வேறெந்த சமூகத்திற்கும் நடந்திராத - நடக்கக்கூடாத ஒன்று நமது சமூகத்திற்கு நடந்திருப்பதாலும் உலகின் அறிவியல், பொருளாதார, வளற்சிக்கு ஈடுகொடுக்குமளவிற்கு அல்லது மாற்றானை எமக்கு ஈடு கொடுக்க அறைகூவல் விடுகின்ற வரைக்கும் எமது இளைய சந்ததி வளர்வதற்கு தூண்டவேண்டுமென்ற தேவையும், நோக்கமும், நம்பிக்கையும் தந்த அறுவடைதான் இவ்விதைகள்… இவை விதைக்கப்படுவதும் வளர்க்கப்படுவதும் அனைவரதும் நேர் மறையான சிந்தனை ஓட்டத்திலும் செய்கையிலும் தங்கியுள்ளதென்பது இன்னுமொரு நியாயப்பாடாகும்.
செய்வதென்ன?
பெருமையும் ஆழமும் கொண்ட ஒன்றிலே பிறந்தாயிற்று, வளந்தாயிற்று இனி என்ன என்கிறபோது இப்பெருமையையும் புகழையும் தக்கவைப்பதும் இன்னும் செழுமையுறச் செய்வதும் நமது கையிலுள்ள கடமையாகும். அதாவது ஒவ்வொரு நீர்வேலியானும் அவனின் அடுத்த தலை முறையிலுள்ள ஒவ்வொருவனுக்கும் அவனவன் துறை சார்ந்து, தரம் சார்ந்து பங்களிப்பு செய்வதென்பதும், மற்றவனை பங்கெடுக்க வைப்பதென்பதும் அதற்கான பலாபலன்களை அரசகேசரியான் படியளப்பான் என்கிற ஆன்மீகச்சிந்தனையுடன் குழந்தைகளின் கல்வி, கலை, இலக்கிய, விளையாட்டு மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிகட்காக நூல் நிலையம், கலைக்கூடம், மைதானம், கணனிகள் பரிசுகள் என வழங்குவோரும் வாங்குவோரும் சங்கமிக்கின்ற ஒரு செயற்பாட்டினூடாக வள்ளலாரை ஆத்த்மதிருப்தியடையச்செய்வதும், இளையோரை நீர்வேலிக்குப் பேரும் புகழும் தேடித்தரும் நற்பாங்கனவராக ஆக்குவதற்குமான தன்னலமற்ற திட்டங்களே இவ்விணையத்தினூடாக ஈடேற்றப்படபோகின்றவை. எம்மை ஆடவத்த ஐங்கரன் உங்களையும் ஆடவைப்பானென்ற வணக்க வாசகத்துடன் வரவேற்கிறோம் www.neervelyarasakesarippillayar.com ற்கு உங்களின் காத்திரமான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் எதிர்பார்த்தவாறு.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை