யாழ், பல்கலைக்கழக முன்னைநாள் துணை விரிவுரையாளரும் தெல்லிப்பழைக் கோட்டத்தின் திட்டமிடல் உதவி அலுவலருமான திரு. வேலுப்பிள்ளை அம்பிகைபாகன் B.A(Hons) அவர்கள் எழுதி்ய ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பிரதான பகுதிகள் இங்கு பிரசுரமாகின்றது.
ஈழத்தில் வரலாற்றுப் புகழ்பெற்ற இந்து ஆலையங்களில் ஒன்றாக விளங்கும் நீர்வேலி அரசகேசரி விநாயகர் ஆலயம் நீண்ட வரலாற்றைப் புலப்படுத்தி நிற்கும் ஓர் ஆலயமாகும். இவ்வாலயம் ஈழத்து தேர்க்கலையிலும் சிற்பக் கலையிலும் தனக்கென உள்ளார்ந்த சிறப்பினைக்கொண்ட அதிசிறந்த சிற்பத் தேர்களில் ஒன்றைக்கொண்டு சிறப்புறுகின்றது.
அரசகேசரி விநாயகர் தேரை வடிவமைத்தவர் தமிழக தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாயவரம் சண்முகம்பிள்ளை ஏகாம்பரம் எனும் ஸ்தபதியாவார். ஐந்து ஆறு மாதம் கொண்ட குறுகிய காலத்தில் நிர்மானித்துள்ளார். இவர் இங்கு ‘‘ குச்ச விக்கிரகம்‘‘ எனப்படும் மூலை நெடும் விக்கிரகங்களைச் செதுக்கியுள்ளார். இற்றைவரையிலும் இத்தகைய ‘‘குச்ச விக்கிரகம்‘‘ ஈழத்திலோ, தமிழகத்திலோ வேந்தத்தேரிலும் கண்டு கொள்ள முடியாத கலைத்திறன் கொண்டு மிளிர்கின்றமை குறிப்பிடத்தக்கது, இத்தகு திறனுக்கு சிறப்பாயமைகின்றார் கலைஞர் ஏகாம்பரம்! புகள்பெற்ற மற்றுமோர் சிற்பியாகிய தியாகராஜனை தன் இளவலாகவும் கொண்டவர்.
கோவில் அமைப்பிலும் தேர் அமைப்பிலும் இந்து ஆகம, சிற்பக் கோட்பாடு மிகவும் இறுகிய நிலையிற் பின்பற்றப்படவேண்டும். எண்கோண மரபிலமைந்த அரசகேசரிப்பிள்ளையாரின் தேர், ‘‘ திராவிடம்‘‘ எனப்படும் அமைப்பு முறையைக் கொண்டது. நான்கு சில்லுகள், சிற்பக்கோட்பாட்டிற்கமைய பார்விதானம், உப்பீடம், அதிஸ்டானம், பேரூர்மட்டம், நராசனமட்டம், தேவாசனம், சிம்மாசனம் என்னும் தளங்களுடையது ஆறு பார்கள் உடைய பார்விதானம், தாழ்புடைப்புச்சிற்பக்கங்கள் கொண்ட நட்டுக் கண்களுடன் காணப்படுகின்றது. ஆதாரத்தில் முன் நடுப்பாகத்தில் ஆதி கூர்மம், பூமாதேவி, ஆதிநாகம் ஆகிய அதார சக்திகளின் உருவங்கள் ஒரே மரத்தில் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டிருக்க, பூமாதேவியின் கீழ் அரைக்காலும் பாதமும் அதே படையில் பின் நடுப்பகுதியிற் காணப்படுகின்றது. உப்பீடம் வரை சதுரமும் அதிஸ்டானம் தொடக்கம் எண்கோணமும் சிம்மாசனம் சதுரமுமாகும்.
நட்டுக்கள், சித்தூர் மட்டம், பேரூர் மட்டம், நாராசனம், தேவாசனம், சிம்மாசனம் என்பன சிற்பவரிகளைக் கொண்டு விழங்குகின்றன. சித்தூர் மட்டம் தெய்வ வடிவங்களையும் பேரூர் மட்டம் தெய்வ லீலை வடிவங்களையும் நராசனம் பக்தராகிய நாயன்மார்களையும் தேவாசனம் எண்திசைக் காவலர்களையும் கொண்டமை சிம்மாசனம் 4 இலக்குமியருடன் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
மணிமண்டபம் ‘சொக்கட்டான்‘ எனக் கலைமரபு கூறும் நுட்பத்துடன் நான்கு வாசல்களைக் கொண்டது. தளம், தேவாசனம் என்பன முறையே எடட்டுக்கால்களும், சிம்மாசனத்தில் நாலுகால்களும் மொத்தம் இருபது பவளக்கால்களாற் தாங்கப்படும் விமானம் எட்டுப்பெரிய யாளிகலாற் தாங்கப்படும் தோற்றம் கொண்டது. மூன்று தளமுடைய இவ்விமானத்தில் மேல் சிகரம் அமைந்திருக்க. அதன் மேல் கலசமும் உச்சிக் குடையும் அமைகின்றன. இறுகிய நுட்பதிட்பம் செறிந்த அவ்விமானத்தை பறந்து செல்லும் நிலையில் உள்ள கந்தர்வர்கள் அழகு செய்கின்றனர். தேரின் சாரத்திய அம்சம், வேகம் கொண்டு விரையும் குதிரைகளின் பாய்தற் சமநிலைத்தோற்றம் உயிர்த்துடிப்புடன் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது, இவை வேறெங்கும் காணுதற்கரிய கலைத்திறனுடையன. தேரைச்செலுத்தும் பிரம்மா நான் முகங்களும் நாற் கரங்களும் கொண்டவராய் முன் இடக்கரம் குதிரைகளின் நாணயக் கயிற்றைப் பிடிக்க, ஓங்கிய வலதுகரம் பிரம்பேந்தியுள்ள தோற்றம் வனப்பு நிறைந்தது, சிற்பத்திறனும் செழுமையும் கூடிய ‘கமலாகாரம்‘ எனப்படும் ‘தாமரைப்பூ வடிவ‘ தோற்றத்தைப் பிரதிபலிப்பதாகும், இத்தளத்தின் உருவரைவு தனித்திறன் கொண்டதெனலாம்.
விநாயகரின் முகத்தின் புறவுருவைக் குறியீட்டு நிலையிற் கட்டறுக்கும் தேரின் உருவரைவு குறிப்பிடத்தக்க மற்றுமோர் அம்சமாகும். ‘மெய்ஞ்ஞானத்தின் மேற்தோற்றமே கலை, கலையின் உற்பொருளே மெய்ஞ்ஞானம்‘ என அறிக.
அரசகேசரிப்பிள்ளையார் தேர்ச் சிற்பங்கள் யாழ்ப்பாணத்து தேர்ச்சிற்பக்கலையின் புதியதோர் பரிணாமம் எனலாம். பிற்காலத்து யாழ்-மரபுத் தேர்களிலும் அரசகேசரிப்பிள்ளையாரின் தேரின் மரபுச் சிற்பங்கள் இடம்பெறுதல் ஓர் சிறப்பம்சமாகும். அதிசிறந்த தேர் மரபைத் தோற்றுவித்து அறிமுகப்படுத்திய நீா்வேலி அருள்மிகு அரசகேசரி விநாயகர் அலயத்திற்கு மட்டுமன்றி மழு இலங்கைக்குமே ஓர் பெருமையாகும் எனக் கூறின் அது மிகையான கூற்றன்று!
*****
இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன் வயிற்றுக் கணபதியே போற்றியெனப் போற்றுகின்றேன்!
*****