Tuesday, December 22, 2009

"பிள்ளையார் கதை"-5

"பிள்ளையார் கதை"-5

[605-745] இவ்விரதத்தின் பயனும், இதனை முறையாகச் செய்யாதவர்க்கு நிகழ்ந்த தீங்கும் இறுதியாகச் சொல்லப்படுகிறது. 


கண்ணநீ கண்ணிலாக் கட்செவி ஆகுஎனக் 
தண்நறுங் குழலுமை சாபமிட் டதுவும் 

அக்கு நீறணியும் அரன்முதல் அளித்த 
விக்கின விநாயகன் விரதம் நோற்றுஅதன்பின் 

சுடர்க்கதை ஏந்துந் துளவ மாலையன் 
விடப்பணி யுருவம் விட்டு நீங்கியதும், [610]
[துளவம்= துளசி] 





பவுரிகொள் கூத்துடைப் பரமனும் நோற்றுக் 
கவுரிஅன்று அடைத்த கபாடந் திறந்ததும், 

வாசமென் குழலுடை மாதுமை நோற்பத் 
தேசம் போகிய செவ்வேள் வந்ததும், 

வானவர் நோற்று வரங்கள் பெற்றதும், 
நாரத முனிவன் நவின்றிடக் கேட்டே 

இந்நிலந் தன்னில் இவ்விர தத்தை 
மன்னவன் வச்சிர மாலிமுன் நோற்றுக் 

காயத் தெழுந்த கடும்பிணி தீர்த்து 
மாயிரும் புவியின் மன்னனாய் வாழ்ந்து [620] 

தடமுலைத் திலோத்தமை தனைமணம் புரிந்து 
மழவிடை போற்பல மைந்தரைப் பெற்றுக்
[மழவு= யானை; விடை=எருது, காளை] 

கடைமுறை வெள்ளியங் கயிலையில் உற்றான் 
[முறையாய் விரதம் நோற்காத இலக்கணசுந்தரி பட்ட பாடு]
பரிவொடு இவ்விரதம் பாரகந் தன்னில் 

விரைகமழ் நறுந்தார் விக்ர மாதித்தன் 
மறிகடற் புவிபெற வருந்தி நோற்றிடுநாள் 

மற்றவன் காதல் மடவரல் ஒருத்தி 
இற்றிடும் இடையாள் இலக்கண சுந்தரி 

மெத்த அன்புடன் இவ் விரதம் நோற்பேனென 
அத்தந் தன்னில் அணியிழை செறித்துச் [630] 
[அத்தம்= ஹஸ்தம், கை]

சித்தம் மகிழ்ந்து சிலநாள் நோற்றபின் 
உற்ற நோன்பின் உறுதி மறந்து 

கட்டிய இழையைக் காரிகை அவிழ்த்து 
வற்றிய கொவ்வையின் மாடே போட 
[கொவ்வை= கொவ்வைக்கொடி நிறைந்த புதர்] 

ஆங்குஅது தழைத்தே அலருந் தளிருமாய்ப் 
பாங்குற ஓங்கிப் படர்வது கண்டு 

வேப்பஞ் சேரியிற் போய்ச் சிறையிருந்த 
பூப்பயில் குழல்சேர் பொற்றொடி யொருத்தி 

அவ்வியம் இல்லாள் அவ்விடந் தன்னிற் 
கொவ்வை அடகு கொய்வாள் குறுகி [640]
[அவ்வியம்=ஔவியம், பொறாமை]

இழையது கிடப்பக் கண்டுஅவள் எடுத்துக் 
குழைதவிழ் வரிவிழிக் கோதை கைக்கட்டி 

அப்பமோடு அடைக்காய் அவைபல வைத்துச் 
செப்ப முடனே திருந்திழை நோற்றிடக் 
[அடைக்காய்= பாக்கு] 

கரிமுகத்து அண்ணல் கருணை கூர்ந்து 
பண்டையில் இரட்டி பதம் அவட்கு அருள 

கொண்டுபோய் அரசனுங் கோயிலுள் வைத்தான் 
விக்கிர மாதித்தன் விழிதுயில் கொள்ள 

உக்கிர மான உடைமணி கட்டித் 
தண்டையுஞ் சிலம்புத் தாளினின்று ஒலிப்பக் [650]

கொண்டல் போல்வருங் குஞ்சர முகத்தோன் 
மனமிகக் கலங்கு மன்னவன் தன்னிடங் 
[கொண்டல்=மேகம்] 

கனவினில் வந்து காரண மாக 
இலக்கண சுந்தரி இம்மனை யிருக்கிற் 

கலக்கம் வந்திடுங் கழித்திடு புறத்தெனத் 
துண்ணென வெழுந்து துணைவியை நோக்கிக் 
[துண்ணென= திடுக்கிட்டு] 

கண்ணுறக் கண்ட கனவின் காரணம் 
அண்ணல் உரைத்திடும் அவ்வழி தன்னில் 

ஆனை குதிரை அவைபல மடிவுற 
மாநகர் கேடுறும் வகையது கண்டு [660]

இமைப் பொழுதுஇவள் இங்கு இருக்க லாகாதுஎன 
அயற் கடைஅவனும் அகற்றிய பின்னர் 

வணிகன் தனது மனைபுகுந்து இருப்ப 
மணியும் முத்தும் வலிய கல்லாய்விட 

அணியிழை தன்னை அவனும் அகற்ற 
உழவர் தம்மனையில் உற்றுஅவள் இருப்ப 

வளர்பயிர் அழிந்து வளம்பல குன்ற 
அயன்மனை அவரும் அகற்றிய பின்னர்க் 

குயவன் மனையிற் கோற்றொடி செல்லக் 
குயக்கலம் உடைந்து கொள்ளை போக [670]

அயற்கடை அவனும் அகற்றிய பின்னர்த்
தூசுதூய்து ஆக்குந் தொழிலோர் மனைபுகத் 

தூசுக ளெல்லாந் துணிந்து வேறாகத் 
தூசரும் அவளைத் தூரஞ் செய்ய 

மாலைக் காரன் வளமனை புகலும் 
மாலை பாம்பாம் வகையது கண்டு 

ஞாலம் எல்லாம் நடுங்கவந்துஉதித்தாய் 
சாலவும் 'பாவிநீ தான்யார்?' என்ன

வெம்மனம் மிகவும் மேவி முனிவுறா 
அம்மனை அவனும் அகற்றிய பின்னர் [680]

அவ்வை தன்மனை அவள்புகுந் திருப்ப 
அவ்வை செல்லும் அகங்கள் தோறும்

வைதனர் எறிந்தனர் மறியத் தள்ளினர் 
கைகொடு குத்தினர் கண்டோர் பழித்தனர்

அவ்வை மீண்டுதன் அகம் அதிற் சென்று 
இவ்வகைக் கன்னிநீ யாரென வினாவக் 

காத்தாண்டு உலகு கருணையோடு ஆண்ட 
மார்த்தாண்ட ராசன் மாமகள் ஒருத்தி

எல்லார்க்கும் மூத்தாள் இலக்கண சுந்தரி 
சொல்லு விக்கிரம சூரியன் மனையெனச் [690] 

சீர்கெட இருந்த தெரிவையை நோக்கி 
நீரது கொண்டு நிலம்மெழு கிடுகஎனச்

சாணி யெடுக்கத் தையலுஞ் சென்றாள் 
சாணியும் புழுத்துத் தண்ணீர் வற்றிப் 

பேணிய புழுவாய்ப் பெரிது தோன்ற 
மானேர் விழியாள் வருந்துதல் கண்டு 

தானே சென்று சாணி யெடுத்துத் 
தண்ணீர் கொணர்ந்து தரை மெழுக்கிட்டு 

மண்ணிய வீட்டில் மணிவிளக்கு ஏற்றிப் 
புத்தகம் எடுத்து வாவெனப் புகலப் [700] 

புத்தகம் பாம்பாய்ப் பொருந்தி நின்றாட 
மெத்தஉள் நடுங்கி வீழ்ந்தவள் கிடப்பக் 

கொவ்வையங் கனிவாய்க் கோதையை விலக்கி 
அவ்வை தானே அகமதிற் சென்று 

புத்தக மெடுத்துப் பொருந்தப் பார்த்து 
வித்தக நம்பி விநாயக மூர்த்தி 

கற்பகப் பிள்ளைசெய் காரியம் இதுவென 
உத்தமி அவ்வை உணர்ந்து முன்அறிந்து 

தவநெறி பிழைத்த தையலை நோக்கி 
துவலரும் விநாயக நோன்பு நோற்றிடுகஎனக் [710] 

கரத்து மூஏழுஇழைக் காப்புக் கட்டி 
அப்பமும் அவலும் மாம் பல பண்டமுஞ்

செப்ப மதாகத் திருமுன் வைத்தே 
அவ்வை கதைசொல ஆயிழை கேட்டு 

மத்தகக் களிற்றின் மகா விரதத்தை 
வித்தக மாக வியங்குஇழை நோற்றுக் 

கற்பக நம்பி கருணை பெற்றதன்பின், 
சக்கர வாள சைனி யத்தோடு 

விக்ர மாதித்தன் வேட்டையிற் சென்று 
தானுஞ் சேனையுந் தண்ணீர் விரும்பி [720]

எவ்வகை செய்வோம் எனஉளம் மெலிந்தே 
அவ்வை தன்மனை அங்குஅவர் அணுக 

எய்துந் தாகமும் இளைப்புங் கண்டு 
செவ்வே அவற்றைத் தீர்க்க வெண்ணி 

இலக்கண சுந்தரி என்பவள் தன்னை 
அப்பமும் நீரும் அரசற்கு அருள்எனச் 

செப்பிய அன்னை திருமொழிப் படியே 
உண்நீர்க் கரகமும் ஒரு பணிகாரமும் 

பண்நேர் மொழியாள் பார்த்திபற்கு உதவ 
ஒப்பறு படையும் உயர்படை வேந்தனும் [730] 

அப்பசி தீர அருந்திய பின்னர் 
ஆனை குதிரை அவைகளும் உண்டுந் 

தான்அது தொலையாத் தன்மையைக் கண்டே 
இவ்வகை சமைத்தநீ யாரென வினவ 

மவ்வல்அம் குழலாள் மௌனமாய் நிற்ப 
அவ்வை தான்சென்று அரசற்கு உரைப்பாள்

கணபதி நோன்பின் காரணங் காண்இது 
குணமுடை இவள்உன் குலமனை யாட்டி 

இலக்கண சுந்தரி என்றுஅவ்வை கூற 
மங்கையை நோக்கி மனம்மிக மகிழ்ந்து [740]

திங்கள்நேர் வெள்ளிச் சிவிகையில் ஏற்றிக் 
கொண்டுஊர் புகுந்தான் கொற்ற வேந்தனும்

ஒண்தொடி யாரில் உயர்பதம் உதவினன் 
சிந்துர நுதலார் சென்றுஅடி பணியச் 

சுந்தரி இருந்தாள் சுகத்துடன் மகிழ்ந்தே.[745] 

காப்பு

கரும்பும் இளநீருங் காரெள்ளுந் தேனும்
விரும்பும் அவல்பலவும் மேன்மேல் - அருந்திக்
குணமுடைய னாய்வந்து குற்றங்கள் தீர்க்குங்
கணபதியே காப்பு.

திருவிளங்கு மான்மருகா சேவதனில் ஏறி
வரும்அரன்தான் ஈன்றருளு மைந்தா - முருகனுக்கு
முன்பிறந்த யானை முகவா உனைத்தொழுவேன்
என்கதைக்கு நீயென்றுங் காப்பு.

நூற்பயன்

பொன்னுமிகும் கல்விமிகும் புத்திரரோடு எப்பொருளும்
மன்னும் நவமணியும் வந்துஅணுகும் - உன்னி
ஒருக்கொம்பின் யானைமுக உத்தமனார் நோன்பின்
திருக்கதையைக் கேட்கச் சிறந்து.

பொற்பனைக்கை முக்கண் புகர்முகத்துப் பொன்மவுலிக்
கற்பகத்தின் நோன்பின் கதைதன்னைச் - சொற்பெருகக்
கற்றவரும் நோற்றவருங் காதலித்துக் கேட்டவரும்
பெற்றிடுவர் கற்பகத்தின் பேறு.

வெள்ளை எருதுஏறும் விரிசடையோன் பெற்றுஎடுத்த
பிள்ளையார் நோன்பின் பெருங்கதையை - உள்ளபடி
நோற்றார் மிகவாழ்வார் நோலாது அருகுஇருந்து
கேட்டோர்க்கும் வாராது கேடு.

சூலிலார் நோற்கிற் சுதரை மிகப்பெறுவார்
காலமிகும் வெங்கலியார் தாம்நோற்கில் - மேலைப்
பிறப்புஎல்லாம் நல்ல பெருஞ்செல்வம் எய்திச்
சிறப்பிலே வாழ்வார் சிறந்து.

பிள்ளையார் கதை முற்றுப்பெற்றது.
திருச்சிற்றம்பலம்.
**********************
இதனைத் தொடர்ந்து, விநாயகர் போற்றித் திருவகவல், வருக்கைக் கோவை, தத்துவ ஞானத் திருஅகவல் முதலியன ஓதி முடிப்பது மரபு என்பதால், அதனையும் அடுத்து இடுகிறேன்.

[அடுத்த பதிவில் நிறைவுறும்]

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை