Wednesday, December 30, 2009

நீர்வேலி அரசகேசரி விநாயகர் தேர்திறன்

யாழ், பல்கலைக்கழக முன்னைநாள் துணை விரிவுரையாளரும் தெல்லிப்பழைக் கோட்டத்தின் திட்டமிடல் உதவி அலுவலருமான திரு. வேலுப்பிள்ளை அம்பிகைபாகன் B.A(Hons) அவர்கள் எழுதி்ய ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பிரதான பகுதிகள் இங்கு பிரசுரமாகின்றது.








Monday, December 28, 2009

பிள்ளையார் கதை மென்புத்தகம்

கடந்த பதிவுகளில் வந்த பிள்ளையார் கதை  மென்புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.

திருவெம்பாவை

திருவெம்பாவை வேண்டுகோள்.

எமது ஆலயத்தில் மார்கழிமாதத்தில் நடைபெறும் மற்றுமோர் விசேட வழிபாடாகிய திருவெம்பாவை பூசை வெகு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இத்திருவிழாவின் இன்னோரு விசேட நிகழ்வான பஜனைப்பயணம் திரு.சந்திரன் தலைமையிலான பஜனைக்குழுவினர் நமது ஊரில் உள்ள வீதிகளால் பஜனைசெய்து வருவார்கள். கடந்த காலங்களைப்போன்று, அவர்களுக்கு அடியவர்கள் ஊக்கமளிக்கும்வண்ணம் வேண்டப்படுகிறீர்கள்.

Sunday, December 27, 2009

கஜமுக சங்காரத்தின் புகைப்படங்கள்



19ம் நாள் மார்கழி மாதம் திங்கட்கிழமை (21.12.2009) பிற்பகல் 4 மணிக்கு நடைபெற்ற கஜமுக சங்காரத்தின் புகைப்படங்களை கீழ்க்கண்ட சுட்டியில் பார்க்கலாம்..
கஜமுக சங்காரத்தின் புகைப்படங்கள் 

Tuesday, December 22, 2009

பிள்ளையார் கதை - 6

பிள்ளையார் கதை - 6

'பிள்ளையார் கதை'யைத் தொடர்ந்து, இன்னும் சில பதிகங்களைப் படித்தல் மரபு. அவை இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. கணபதி எல்லாம் தருவான்!

போற்றித் திருவகவல் 

அருள்புரிந்து அருளும் அரசே போற்றி 
இருவினை துடைக்கும் இறைவா போற்றி

மறைமுனி ஒருவன் மாங்கனி கொணர்ந்து 
கறைமிடற்று இறைவன் கையில் கொடுப்ப 

வேலனும் நீயும் விரும்பி முன்னிற்ப 
ஒருநொடி அதனில் உலகெலாம் வலமாய்

வரும்அவர் தமக்கு வழங்குவோம் யாமென 
விரைவுடன் மயில்மிசை வேலோன் வருமுனர்



"பிள்ளையார் கதை"-5

"பிள்ளையார் கதை"-5

[605-745] இவ்விரதத்தின் பயனும், இதனை முறையாகச் செய்யாதவர்க்கு நிகழ்ந்த தீங்கும் இறுதியாகச் சொல்லப்படுகிறது. 


கண்ணநீ கண்ணிலாக் கட்செவி ஆகுஎனக் 
தண்நறுங் குழலுமை சாபமிட் டதுவும் 

அக்கு நீறணியும் அரன்முதல் அளித்த 
விக்கின விநாயகன் விரதம் நோற்றுஅதன்பின் 

சுடர்க்கதை ஏந்துந் துளவ மாலையன் 
விடப்பணி யுருவம் விட்டு நீங்கியதும், [610]
[துளவம்= துளசி] 



"பிள்ளையார் கதை - 4"


"பிள்ளையார் கதை - 4" 


[401-604] திருமுருகன் அவதாரம் 404 முதல் 450 முடியவும், விநாயகசட்டி விரதம் 528 முதல் 569முடியவும் இதில் முறையாகக் கூறப்பட்டுள்ளது.] 


அந்தமில் செல்வத்து அரசியல் பெற்றார். 
[திருமுருகன் அவதாரம்] 
ஈங்கு இது நிற்க இவ்விர தத்துஇயல் 


ஓங்கிய காதைமற் றொன்று உரை செய்வாம் 
கஞ்சநான் முகன் தரும் காசிபன் புணர்ந்த 

வஞ்சக மனத்தாள் மாயைதன் வயிற்றிற் 
சூரன் என்று ஒருவனுந் துணைவருந் தோன்றி 


Wednesday, December 16, 2009

"பிள்ளையார் கதை" - 3

"பிள்ளையார் கதை" - 3

[201-400] [இந்தப் பதிவில், ஆவணியில் வரும் விநாயகர் சதுர்த்தி விரதமுறை சொல்லப்பட்டிருக்கிறது]

கானமர் கொடிய கடுவி லங்காலுங் 
கருவி களாலுங் கால னாலும் 

ஒருவகை யாலும் உயிர ழியாமல் 
திரம்பெற மாதவஞ் செய்து முன்னாளில் 

வரம் பெறுகின்ற வலிமை யினாலே 
ஐம்முகச் சீயம்ஒத்து அடற்படை சூழக் 

கைம்முகம் படைத்த கயமுகத்து அவுணன் 
பொன்னுலகு அழித்துப் புலவரை வருத்தி 

இந்நிலத் தவரை இடுக்கண் படுத்திக் 
கொடுந் தொழில்புரியுங் கொடுமை கண்டு ஏங்கி [210]


Tuesday, December 15, 2009

பிள்ளையார் கதை வேண்டுகோள்

விநாயகர் அடியார்களே!
நீர்வேலியின் மத்தியிலே எழுந்தருளி அடியவர்களுக்கு அருள் பாலித்து வரும் எம்பெருமானுக்கு நிகளும் விரோதி வருடம் கார்த்திகை மாதம் 17மஆம் நாள் (03.12.2009) வியாளக்கிழமை நண்பகல் 11.00  மணிக்கு விசேட அபிசேக ஆராதனையுடன்  விரதம் ஆரம்பமாகும். அன்றைய தினம் மாலை 6.00 மணியளவில் இலட்சார்ச்சனை ஆரம்பமாகி தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறும். 19ம் நாள் மார்கழி மாதம் திங்கட்கிழமை (21.12.2009) பிற்பகல் 4 மணிக்கு கஜமுக சங்காரம் நடைபெறும்.

பிள்ளையார் கதை 2

நூல்: 

மந்தர கிரியில் வடபால் ஆங்கு ஓர் 
இந்துவளர் சோலை இராசமா நகரியில்

அந்தணன் ஒருவனும் ஆயிழை ஒருத்தியுஞ் 
சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டிக்

கடவுள் ஆலயமுங் கடிமலர்ப் பொய்கையுந்
தடநிழற் பள்ளியுந் தாம்பல சமைத்துப்

புதல்வரைத் தருகெனப் பொருப்புஅரசு ஈன்ற 
மதர்விழி பாகனை வழிபடு நாளின்

மற்றவர் புரியும் மாதவங் கண்டு 
சிற்றிடை உமையாள் சிவனடி வணங்கிப் [10]

 

Sunday, December 13, 2009

பிள்ளையார் கதை 1

கணபதி துணை.

பிள்ளையார் கதை

சிறப்புப் பாயிரம்

செந்தமிழ் முனிவன் செப்பிய காதையுங்
கந்த புராணக் கதையில் உள் ளதுவும்
இலிங்க புராணத்து இருந்தநற் கதையும்
உபதேச காண்டத்து உரைத்தநற் கதையும்
தேர்ந்தெடுத்து ஒன்றாய்த் திரட்டிஐங் கரற்கு
வாய்ந்தநல் விரத மான்மியம் உரைத்தான்
கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்குந்
துன்னிய வளவயற் சுன்னா கத்தோன்
அரங்க நாதன் அளித்தருள் புதல்வன்
திரம்பெறு முருகனைத் தினந்தொறும்
வரம்பெற வணங்கும் வரதபண் டிதனே.



விநாயகர் விரதம்

க்கள் சாந்த வழிபாடு செய்வதில் விரதங்களும் ஒன்றாகும். விநாயகர், சுப்பிரமணியர், சிவன், சத்தி வணக்க முடைமையால் ஆன்ம உய்தி பெறலாம். 
விநாயகர் விரதங்கள் பல. அவற்றுள் கார்த்திகை மாசம் அபரபக்கப் பிரதமை முதல் மார்கழி மாசத்துப் பூர்வ பக்கச் சஷ்டி வரையும் உள்ள இருபத்தொரு நாட்கள் அனுஷ்டிக்கும் விரதமும் ஒன்றாகும். இது, விஷ்ணு மூர்த்தியை பாம்பாக இருக்கும்படி தேவி சபித்ததை விமோசனஞ் செய்யச் சாதனமாயிருந்தது.




Saturday, December 12, 2009

"பிள்ளையார் கதை"

டிசம்பர் மாதம் 1-ம் தேதி கார்த்திகை தீபத் திருநாள், திருக்கார்த்திகை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்!
இந்த நாளுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு!
விநாயகப் பெருமானுக்கான விநாயகசட்டி விரதம் அனுஷ்டிப்போர் இதற்கு அடுத்த [கார்த்திகைக் கார்த்திகை கழிந்த பின்னாளில்] நாளில் தான் காப்பு கட்டி 21 நாள் விரதமிருக்கப் பூசனை செய்யத் தொடங்குவர்.
இதனை விளக்கும் "பிள்ளையார் கதை" என்னும் நூலை இங்கு அளிக்கிறேன்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை