Friday, February 12, 2010

பரந்த அறப்பணி நடைபெறும் ஆலயச்சூழல்

பரந்த அறப்பணி நடைபெறும் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயச்சூழல்
              
       நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயச்சூழல் இயல்பாகவே சமூகப்பணி நடைபெறும் சூழமைவுடையதாகவுள்ளது. கி.பி 16ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகளின் பரம்பரைத் தோன்றலான இரகுவம்ச மகாகாவியத்தைத் தமிழில் படைத்த அரசகேசரி மகாமந்திரியால் ஸ்தாபிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புடையதாக இவ்வாலயமுள்ளது. இப்பழமையும் அருட்சிறப்பும் மிகுந்த இவ்வாலயச் சூழல் இயல்பாகவே தெய்வீகத் தன்மையுடன் சமூகப்பணிகள் நடக்கும் இடமாகவும் அமைந்துள்ளது.                                                                                                                

              சிவத்தொண்டர் நிலைய செல்லத்துரைசுவாமிகள் இச்சூழலில் வளர்ந்தவரே. மேலும் இப்பிராந்தியம் பல சைவத்தமிழ்ச் சான்றோர்களைத் தந்து பெருமை பெற்றது. இத்திருக்கோவிலின் திருத்தேர் சிறந்த சிற்பசித்திர வேலைப்பாடுகளுடையது. இன்றைக்கும் புராணபடன மரபைப் பேணி வருடாந்தம் கந்தபுராணம், பெரியபுராணம், திருவாதவவூர் ப்புராணம், பிள்ளையார் கதை என்பன படிக்கப்பட்டு பயன் சொல்லப்படுவதும் இவ்வாலய சிறப்பே.
             அரசமரங்கள் நிறைந்து இயற்கையான சூழலில் அழகுறு இராஜகோபுரத்துடன் திகழும் இவ்வாலயத்துடன் தொடர்புடையனவாய் ஆலயத்தினைச் சுற்றி ஸ்ரீகணேசா சனசமூகநிலையம், ஸ்ரீகணேசாமுன்பள்ளி, ஸ்ரீகணேசா அறநெறிப் பாடசாலை, திருநாவுக்கரசுநாயனார் குருபூசைமடம், கணேசா அந்தியகால ரதம்இ வடக்குவீதி மடம், சீ.சீ.த.க.பாடசாலை, ஆவுரோஞ்சுகல்லுடன் தண்ணீர் தொட்டியுடன் அமைந்த இரு பொதுக்கிணறுகள்  என அமைந்து பரந்த அறப்பணிநிலையமாக அமைந்துள்ளது.
              தவிர இவ்வாலய மண்டபத்தில் திருமணங்களும் விழாக்காலங்களில் தொடர்ச்சியாக சனசமூகநிலைய மண்டபத்தில் அன்னதான வைபவங்களும் நிகழக்காணலாம். மேலே நாம் குறிப்பிட்டவற்றுள் சீ.சீ.த.க.பாடசாலை தவிர்ந்த மற்றைய யாவும் பிள்ளையார் ஆலயத்தை மையப்படுத்தியதாக ஆலய கட்டமைவை பின்பற்றுவதாக அமைய காணமுடிகின்றது. இதற்கெல்லாம் இங்குள்ள பெரியவர்களுடைய அயரா முயற்சியும் மக்களின் விநாயகப்பெருமான் மீதான பயபக்தியுமே காரணமெனலாம்.
அண்மையில் இங்கு ஸ்ரீகணேசா முன்பள்ளி வெள்ளிவிழாவும் ஸ்ரீகணேசாசனசமூகநிலைய வைரவிழாவும் சிறப்பாக நடைபெற்றமையும் குறிக்கத்தக்கதே. எனினும் காலமாற்றத்தாலும் சீரமைக்கப்படாமையாலும் ‘அந்தியகாலரதம்’ பழுதடைந்து வருவது கவலைக்குரியதே.
             எனினும் கல்வி சமய சமூகப்பணிகளால் இவ்வாலயச்சூழல் சிறப்பும் பெருமையும் பெறுகின்றது.

தகவல் :-
தி.மயூரகிரி - நீர்வேலி
 
குறிப்பு-படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.



சீ.சீ.த.க.பாடசாலை
 ஸ்ரீகணேசாமுன்பள்ளி
 
ஸ்ரீகணேசா அறநெறிப் பாடசாலை



 ஸ்ரீகணேசா சனசமூகநிலையம்


ஆவுரோஞ்சுகல்லுடன் தண்ணீர் தொட்டியுடன் அமைந்த இரு பொதுக்கிணறுகள் 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை