வரலாற்றுச் சிறப்புமிக்கதும் தமிழில் இரகுவம்சம் செய்த அரசகேசரி மஹாமந்திரியால் வணங்கப்பெற்று ‘செம் பாட்டுப் பிள்ளையார்’ என்று போற்றப்பெறுவதுமாகிய திருத்தலம் நீர்வை அரசகேசரி ஆலயம். விநாயகப் பெருமானும் பாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரரும் மூலவர்களாக எழுந்தருளியுள்ள இத்திருக்கோயிலில் அண்மையில் பாலஸ்தாபனம் செய்யப்பெற்று திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வகையில் எதிர்வரும் ஆனி மாதம் முதல் வாரத்தில் மஹாகும்பாபிஷேகம் செய்வதற்கு உத்தேசிக்கப் பெற்று அதற்கான ஆயத்தங்கள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. இது குறித்த ஆயத்தங்களில் ஈடுபட்டு வருவதாக ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.சா.சோமதேவக்குருக்களும் ஆலய அறங்காவலர் சபையில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ச.க.முருகையா அவர்களும் நம்மிடம் தெரிவித்தனர்.
கோயில் புதுப்பொலிவு செய்யப்பெற்று துரிதகதியில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். இதே வேளை வரலாற்றுச் சிறப்புக்களை அடையாளப் படுத்தும் வகையில் ஆலயத் திருப்பணிகள் அமைய வேண்டும் என்கிற நோக்கிலும் பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அறியமுடிகிறது.
தகவல்- தி.மயூரகிரி