அடுத்த மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் மகோற்சவத்தை முன்னிட்டு ஆலய வெளிமண்டபச் சுவர்கள், யன்னல் கம்பிகள் மற்றும் வாயில் அடைப்பு (கேற்) என்பவற்றிற்குத் தீந்தை (பெயின்ற்) பூசப்பட்டு வருகின்றது. இதே நேரம் ஆலயத்தின் பெருமைகளை எடுத்தியம்பும் வகையில் ஆலயக் குருக்கள் தேவர் ஐயாவின் மகன் ஜெயன் ஐயாவின் முயற்சியில் நூல் ஒன்றும் தொகுக்கப்பட்டு வருகின்றது.
நீர்வேலியும் விநாயகர் வழிபாடும், அரசகேசரியும் இரகுவம்சமும், அரசகேசரிப் பிள்ளையாரை மையப் படுத்திய சமூக நிறுவனங்கள், அரசகேசரிப் பிள்ளையார் கோவில் வரலாறு அன்றும் இன்றும், வருடம் தோறும் இடம்பெறும் உற்சவங்களும் பயன்படுத்தப்படும் வாகனங்களும், விநாயக விரதங்கள், விநாயகர், முருகனின் தேர்களின் திறன் முதலிய தலைப்புக்களில் துறைசார்ந்த சான்றோரால் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. கொடியேற்ற நாளன்று இப்புத்தகம் வெளியிட்டு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நூலைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சிவஸ்ரீ. சோ. ஜெயன் ஐயா தெரிவித்தார்.