நீர்வை அரசகேசரித் தல வைத்தீஸ்வரப் பெருமானுக்கு
சங்காபிஷேக விழா.
சங்காபிஷேக விழா.
நீர்வேலி அரசகேசரித் திருத்தலம் மூன்று கருவறைகளை (மூலஸ்தானங்களை) உடையது. ஓன்று பிள்ளையாருக்குரியது. இப்பெயரிலேயே ஆலயமும் அழைக்கப்படுகின்றது. மற்றைய முக்கிய மூலஸ்தானம் வைத்தீஸ்வரப் பெருமானுக்குரியது. வைத்திய நாதன் என்ற திருநாமத்துடன் சிவப்பரம்பொருள் இலிங்க வடிவில் இங்கு காட்சி தருகிறார்.
இச்சிவ பெருமானின் மூலாலயத்தைச் சுற்றியே உண்மையில் கோஷ்ட மூர்த்திகளான தட்சணாமூர்த்தி போன்றனவும் சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்திகளும் அமைந்து விளங்குகின்றன. திருவெம்பாவை உத்ஸவத்தில் தினமும் அம்மையுடன் சுவாமி எழுந்தருளி வீதியுலாக் கண்டருள்வார். நிறைவு றாளில் தீர்த்தவாரியும் இடம்பெறுகிறது. இதுவே இப்பெருமானுக்குரிய வருடாந்த உத்ஸவமாகவும் இருக்கிறது.
இத்தகு சிறப்புடைய வைத்தீஸ்வர ஸ்வாமிக்கு வரும் 16.08.2010 திங்கட்கிழமை வழமை போல சுந்தரமூர்த்தி சுவாமிகளின் குருபூஜையினை முன்னிட்டு (ஆடிச் சுவாதி) காலை விசேட சங்காபிஷேகம் நடைபெற்று பெரியபுராண படனப் பூர்த்தியும் இடம்பெறவுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் பெரியபுராண படனம் இத்திருநாளில் நிறைவு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவலிங்கம் காசியிலிருந்து கொண்டு வரப்பெற்று பிரதிஷ்டிக்கப்பெற்றது. இவ்விறைவன் பெயரில் திருவூஞ்சல், அந்தாதி ஆகிய இலக்கியங்கள் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தகவல்
தி - மயூரகிரி