Sunday, August 01, 2010

அரசகேசரிப் பிள்ளையார் பிள்ளைத்தமிழ்

அரசகேசரிப் பிள்ளையார் பிள்ளைத்தமிழ்


1. விநாயகர் துதி

ஒற்றைக் கொம்பும் செந்நிற மேனியும்
 ஒளிரும் யானைத்திருமுகமும் பாசாங்குசமும்
வற்றாக் கருணைவளர் சிற்றடிகளும்
 வரதகரமும் உடைய நின்னை வாழ்த்தும்
நற்றமிழ் பிள்ளைக் கவி தழைத்தே
 நலமுற விளங்கிடவே கஜமுகனைச்
செற்றவனே நீர்வை அரசகேசரியாய்
 செம்மை வரந்தந்து காத்திடுவாயே


2. காப்பு

ஏர் கொண்ட யானைமுகத் தன்னை ஒப்பார்
 எங்குமே இலாத ஏகதந்தன் மததாரைகள்
பார் தனில் சிதறிட பாலனாய் விளையாடும்
 பரமனாம் அவனை அம்மையப்பனும் பிரமனும்
கார் கொண்ட மேனிக்கண்ணனும் மற்றைக்
 கடவுளர் யாவரும் முப்பத்துமூவரும் மாதரும்
சீர் கொண்டு சிறப்போடு காக்க நன்றே இடர்
 சிதறிடச் செய்திடும் சீராளனை காக்க நன்றே

3. செங்கீரை

கந்தமலி கமலத் திருமுகம் அசைந்தாட
 கவினொழுகு கருமுடியும் இணைந்து ஆட
தந்தமத நீர் பொழிந்து அலைமோதி
 தரணியெல்லாம் விரிந்தோட உலகில்
செந்தமிழும் செழும் வடமொழியும் நின்னை
 சீரார் கணாதிபன் என்றே போற்ற அழகுச்
சிந்துரமுக நீர்வை இளங்களிறே செங்கீரையாடியருளே
 சுந்தரமாம் அரசகேசரிப் பிரான் செங்கீரையாடியருளே

4. தாலாட்டு

புதிய வாசனை பரப்பி எங்கும் பொலியும்
 புகழ் வண்டினங்கள் விரும்பு தேன்மேனியரே
பதியிலாராகி போர் எனும் கொடுமையில்
 பார் எங்கும் அலைந்து பனியிலும் வறளிலும்
வதியும் நின் பிள்ளைகளையெல்லாம் கருணையொடு
 வா வா என்று கூவியழைத்து அருளு பெருங்கொடை
நிதியனே அரசகேசரி நிமலனே தாலோ தாலேலோ
 நீர்வை வளர் இளமதவேளன் தாலோ தாலேலோ

5. சப்பாணி

எட்டுத் திசையும் கரம் வீசியாடிடும் வைத்தீச நடேசனும்
 என்றுமிளங் கன்னியான பலாம்பிகையாகிய உமையவளும்
தொட்டுத் தடவி மிகவிரும்பி வளர்க்கும் இளங்களிற்றுத்
 தூயவனே சிறுவயிற்றனே எருக்கமொடு தூய இருஅறுகும்
இட்டே வணங்க இட்டமோடருளும் சதுர்த்தியிலுதித்தவனே
 இனியநறு மஞ்சள் கோமயம் பிடித்தே ஆராதிப்பினும்
அட்டமாசித்தி தரும் ஆண்டவனே கொட்டுக சப்பாணி
 அரசகேசரிப் பாவலனுக்கருளிய கடவுளே கொட்டுக சப்பாணி

6. முத்தம்


மறைகளும் அறிய ஒணாத அற்புதமே மாமறையோர்
 மகிழ்ந்து பரவும் சிவகுருவே பிள்ளையார்பட்டி வாழ்வே
நிறைவளை வல்லபை பதியே நிர்க்குணானந்த நிலையமே
 நீர்வேலியூரார் மிகப்போற்றும் எழிலே வாய்க்காற்தரவையில்
கறைமிடற்றண்ணல் மூத்தகுமாரனாய் உறைபவனே திருமுறை
 காண்பித்த நம்பி நாயகனே வாதாபி கணேசனே வேதாகம
முறை மிகவளர்ந்திடும் அரசகேசரித்தல இறைவா முத்தம் தருகவே
 முனிவர் அகத்தியர் பணிந்திடும் கணபதி முத்தம் தருகவே

7. வருகை

இருகை ஊன்றித் தவழ்ந்து நடந்து வேழமுகமாட இனிதாய் வருக
 ஈசன் உவக்க இரகுவம்ச அரசகேசரி போற்றும் எந்தாய் வருக
உருகும் அடியார் உள்ளத்தூறும் நறுந்தேன் கடவுள் வருக
 உவப்பிலா ஆனந்த சிவானுபூதி தந்தருளும் செல்வா வருக
மருவும் புலனைந்தும் அடக்க ஒரு அங்குசம் கொள்கரத்தாய் வருக
 மாவைணவரும் தும்பிக்கையாழ்வார் என்றே ஏத்தும் தலைவா வருக
முருகவேட்க்கு முன்னுதித்த நீர்வை முதல்வா வருக வருகவே
 முத்தியருளும் அலங்கார சித்திவிக்னேச வருக வருகவே

8. அம்புலி

வையகம் வானகம் யாவும் வணங்கும் வள்ளலாய குழந்தை
 வரந்தரு நடனவிநாயகன் இவனை அவமதித்து சாபம்
எய்தி அவலப்பட்டு மிக நைந்து துடிதுடித்ததை நினைந்தே
 ஏகதந்தன் எனை இப்போது அழைத்த பாக்கியம் பெற்றனம்
ஐயனே வருகிறேன் என்று கூவியோடி வருக சந்திரனே
 அது இன்றேல் நம்மரசு நினைத் தாவியெடுத்து உண்ணுமிது
ஐயமில்லை ஆதலால் இக்கணமே அம்புலி ஆடவாவே
 அரசகேசரி நீர்வை அரசனொடு அம்புலி ஆடவாவே

9. சிற்றில்

பெருத்த வயிறில் அண்டமெல்லாம் புரக்கும் பூதவயிறரே
 பெரும்புண்ணியம் செய் தேவரேத்து தேவசரீரம் உடையவரே
கருத்தில் நிறுத்து மானிடரை காக்கு மனிதவுடலும் பெற்றவரே
 களிறின் முகத்துக் கற்பகமே கற்றார் ஏத்தும் இறையே அடியாரை
வருத்தல் நினக்கு அழகாமோ வள்ளல் தன்மைக்குச் சிறப்பாமோ
 கஜமுகப் பேர் பொல்லாக் கயவனையும் மூஷிகமாக்கி அன்பால்
திருத்தி அருளிய பெம்மானே புகழரசகேசரியாய் சிற்றில் சிதையேலே
 தீராப் பிறவி தீர்த்தருளும் ஓங்காரத்துறை தேவா சிற்றில் சிதையேலே

10. சிறுபறை

மலைக்கோட்டை உச்சி தனில் மகிழ்ந்துறையும் பொருளே
 மாதவ வியாசர்க்காய் மாபாரதம் எழுதிய கருணைக்கடலே
அலையும் மனதையும் ஆற்றுப்படுத்தும் ஆனைமுகவேளே
 ஆராத்தமிழ்க் காதல் அவ்வைக்கருளிய அருந்தேவே
சிலை வடிவாக விண்வெளிக்கும் சென்ற பேரற்புதனே
 சுந்தர பஞ்சமுகமும் சிம்மவாகனமும் உடையானே
கலைநிறை இரதமுமுடைய தேவே கொட்டுக சிறுபறையே
 கல்வித்திருவின் அரசே அரசகேசரியாய் கொட்டுக சிறுபறையே

11. சிறுதேர்


சொக்கன் தானும் முப்புரம் எரிக்க நினை நினையாமல்
  சீரிய தேரில் இவரவே அதனச்சறுத்த விளையாட்டுக்கார
சக்கரமுடைய மாயன் திருமருக முருகனுக்கு மூத்தவ
  சீரார் வலஞ்சுழி வெள்ளைவடிவுடையாய் மாமாங்கநகர்
துக்கமழிக்கும் தூயவ நீர்வைத் தலம் வளர் கணேச
  தூய கணாதிபர் இதயத்துள் ஒளிரும் தூயோனே
திக்கெட்டும் பக்தர் சிறப்புற அழகுச் சிறுதேருருட்டியருளே
  திருநிறை தமிழ் அரசகேசரியாய் சிறுதேருருட்டியருளே

நீர்வை.தி.மயூரகிரி சர்மா

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை