Monday, June 13, 2011

திருக்குடநன்னீராட்டல்

நீர்வையின் நடுவே எழுச்சி பெற்றிருக்கிற அரசகேசரியின் எழிலுருவம்..
ஏத்துமின்.. போற்றுமின்..


நீர்வை அரசகேசரிப் பிள்ளையார் திருக்கோயிலில் நேற்று காலையில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆலய முன்றலில் விநாயகரை நோக்கி அமைக்கப்பட்டுள்ள அரசகேசரியின் திருவுருவத்திற்கும் திருக்குடநன்னீராட்டல் நடந்தது.

நீரூரின் வரலாற்றுச் சிறப்பினை வெளிப்படுத்த வல்ல அற்புத எழிலுருவாக அரசகேசரி இங்கு எழுந்து நிற்கிறார். 16ம் நூற்றாண்டுக்குரியவரான இவர் யாழ்ப்பாண இராச்சிய சக்கரவர்த்தி பரராஜசேகரனின் மருகனும் மஹாமந்திரியுமாவார். இவரே நீர்வேலியில் அரசகேசரியானின் திருத்தலம் உருவாவதற்கு காரணராக விளங்கியவர் என்றும் வரலாறு சான்று பகர்கிறது. அரசனாகவும் விளங்கிய அரசகேசரி மாபெரும் கவிச்சக்கரவர்த்தியாவான். ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தவனான இவனே ரகுவம்ச மஹாகாவியத்தைத் தமிழில் படைத்தவன்.

இப்பெருமைகளுக்கெல்லாம் உரியவனாய அரசகேசரிக்கு நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் திருக்கோயில் முன்றலில் புதிதாக திருவடிவம் அமைக்கப்பட்டுள்ளது. ‘சிவத்தமிழ்ச் சொல்லழகர்’ விரிவுரையாளர் ச.லலீசன் அவர்களின் உபயமாக இவ்வுருவம் அமைக்கப்பட்டுள்ளது.

அரசகேசரியின் புகழ்களை சம்ஸ்கிருத மொழியில் ஆலய குருக்கள் சோமதேவசிவாச்சார்யார் குறிப்பிட்டு வேத கோஷம் முழங்க குடமுழுக்குசெய்தார். தொடர்ந்து பிள்ளையாரின் பிரசாதமாக அரசகேரிக்கு பரிவட்டம் அணிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அவர்கள் அரசகேசரிக்கு மலர் மாலை அணிவித்தார். கோப்பாய் பிரதேச செயலர் ம.பிரதீபன் மலர்கள் சொரிந்து வணக்கம் செலுத்தினார். அவ்வாறே சிவாச்சார்யார்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் அரசகேசரியைப் போற்றி செய்தனர்.

இந்நிகழ்வினை ‘மிகச்சிறப்பான செயற்பாடு’ என்றும் ‘வரலாற்றுப் பெருமையை வருங்காலமும் உணரச் செய்யும் நல்ல செயற்பாடு’ என்றும் அரசஅதிபர் முதலானவர்கள் விதந்துரைத்தனர்.


தகவல்- ஜெ.செந்தூரன்
படங்கள்- குமரஸ்ரீ (ஆசிரியர்)

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை