இந்து தர்மத்தை யாழகத்தில் அழியாமல் பாதுகாப்பதில் நீர்வை குறிப்பிடத்தக்க பங்காற்றியிருக்கிறது. நீர்வேலி என்று அழைக்கப்பெறும் இவ்வூர் போர்த்துக்கேயர் காலத்தில் இந்துசமயக் காவலரண்களுள் ஒன்றாயிருந்திருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தை தமது தந்திரோபாயத்தினால் கைப்பற்றிய போர்த்துக்கேய மதவெறியர்கள் இந்துக்களின் மீது கட்டாய மதத்திணிப்புச் செய்தனர்.
நல்லையிலும் மாவிட்டபுரத்திலும் இன்னும் இன்னும் எத்தனை எத்தனையோ இடங்களிலும் அமைந்த இந்துப்பேராலயங்கள் இவர்களால் நிர்மூலம் செய்யப்பட்டன. சைவப்பற்றாளர்களும் குருமார்களும் வதைக்கப்பட்டனர். “நல்லூரிலிருந்த இராசதானியும் பெரிய கோயிலும் (கந்தசுவாமி கோயில்) போர்த்துக்கேயரால் கி.பி 1621இல் முற்றாக அழிக்கப்பட, அங்கிருந்த கோயிற் சிலா விக்கிரகங்களைக் குளமொன்றில் புதைத்து விட்டு கோயிற் குருக்கள்மார் நீர்வேலிப்பகுதிக்கு ஓடினர்”
இப்படி அக்கால வரலாறு எழுதிய ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை (யாழ்ப்பாண சரித்திரம், 1933) குறிப்பிடுகிறார். ஆக, அந்நிய ஆட்சிக் காலத்தின் காவலரணாக நீர்வேலி இருந்திருக்கிறது.
நீர்வேலி ஸ்ரீலஸ்ரீ சிவ.சங்கரபண்டிதர் போன்ற பெரியவர்கள் வாழ்ந்த பதி. பெரியதோர் இந்துக் கல்லூரியைத் தன்னகத்தே கொண்ட ஊர். நீரவாடீபுரம் என்றும் கதலீவனம் என்றும் சொல்லப்படும் இவ்வூர் இந்துக்களின் வழிபாட்டு மொழியான சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும் இலங்கையில் பெரும்பங்காற்றிய ஊர். இத்துடன் கவிஞர்களுக்கும் தமிழறிஞர்களுக்கும், ஆங்கிலக் கல்விமான்களுக்கும் இவ்வூரில் குறையில்லை. இவ்வாறாக.. வளம் பொருந்திய நீர்வேலியின் நடுநாயகமாக விளங்குகிறது நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் திருக்கோயில்.
விநாயகர், சிவபெருமான், அன்னை என்று மூவருக்கும் தனித்தனிக் கருவறைகள் அமைந்திருக்கின்றன. இவற்றில் விநாயகருக்கும் சிவனாருக்கும் தனித்தனியே விஸ்தாரமான மண்டபங்களுடன் கூடியதாக கோயில் அமைந்திருக்கிறது. இரு ஆலயங்கள் ஒன்றிணைந்தாற் போன்றது இக்காட்சி.. இராஜசிம்ம கணபதி எனப் போற்றப்படும் அரசகேசரி கணபதிக்கு அருகிலேயே பாலாம்பிகை சமேதராக வைத்தீஸ்வரர் காட்சி கொடுக்கிறார். இவ்விரு இறைவர்களுக்கும் தனித்தனியே ஊஞ்சல் முதலிய இலக்கியங்களும் அமைந்து விளங்குகின்றன. வாயிலிலே பஞ்சதள ராஜகோபுரம்.. உள்ளே நுழைந்தால் ஒரு சிவாலயத்திற்குரிய அத்தனை இலட்சணங்களும் கொண்ட அமைப்பு. தென்பக்கம் இறைவன் தீர்த்தமாடும் திருக்குளம். உள்வீதியில் வலம் வருகிற போது திருமஞ்சனக்கிணற்றையும் பார்க்கிறோம்.
இது தான் இறைவனுக்கு தினமும் அபிஷேகத்திற்குப் பயன்படும் தீர்த்தக்கிணறு. மிகக் கவனமாகப் பார்த்தால் இதில் ஆச்சர்யம் ஒன்றுண்டு. கூபதீர்த்தமான இது மனிதர்களால் வெட்டப்படாதது. மூன்றடி விட்டமும் பதினெட்டு முழம் ஆழமும் கொண்ட இக்கிணற்றிலிருந்து அள்ள அள்ளக்குறையாத அமுதஜலம் பிரவாகிக்கிறது. இக்கிணற்றினை வைத்தே இவ்வாலய வரலாறும் ஆரம்பிப்பதால் இனிமை ததும்பும் இத்தீர்த்தத்துளியுடன் வரலாற்றுத் துளியையும் நோக்கலாம். இந்த கிணற்றின் ஆரம்பம் தொடர்பில் பல ஐயப்பாடுகள் உள. ஸ்ரீ ராமர் இராவண
வதம் நிறைவுற்றதும் சீதாதேவியுடன் இப்பகுதி வழியே வந்த போது தன் வில்லை ஊன்றிய இடத்தில் உருவானது இக்கிணறு என்ற கருத்தும் உண்டு. கோதண்ட வில் ஊன்றி நீர் பெற்ற இடமே இன்றைய கிணறு என்பர். இது எவ்வாறாகிலும், 1591-1616 காலப்பகுதியில் நல்லூரை இராசதானியாகக் கொண்டு யாழ்ப்பாணத்தை ஆண்டவன் சிங்கைப் பரராஜசேகரன் என்ற பேரரசன். தமிழார்வம் மிக்கவனான இவன் நல்லூரில் தமிழ்ச்சங்கம் அமைத்துத் தமிழாய்ந்திருக்கிறான். யமுனா ஏரியைக் கட்டுவித்திருக்கிறான். புல இலக்கியங்களின் எழுச்சிக்கு காரணனாக விளங்கியிருக்கிறான். இந்த பரராஜசேகரனுக்கு உற்ற துணையாக அவனது மஹாமந்திரியாயும், மருகனாயும் விளங்கியவன் அரசகேசரி.
இவன் மந்திரி மட்டுமல்ல.. வடமொழியில் காளிதாசர் செய்த இரகுவம்சத்தைத் தமிழில் பாடிய கவியரசனுமாவான். ஆவன் ஓரிரவில் ஒரு கனவு கண்டான். அரசகேசரியின் கனவில் தோன்றிய ஆனைமாமுகத்து ஐங்கரப்பெருமான் ஒரு கட்டளை பிறப்பித்தார். அதிகாலையிலேயே எழுந்து கண்ட கனவின் உண்மையறிய தன் புரவியில் ஏறிப்பறந்தான். இன்றைக்கும் இராஜவீதி என்றழைக்கப்படுகிற வீதியூடே அவனது குதிரை பறந்தது. வழியில்.. தன் கனவில் கண்ட பனந்தோப்பு ஊடாக தன் குதிரையைச் செலுத்தினான். கடவுள் காட்டிய இடம் எது? தேடினான். ..தேடினான்… அவனது தேடலில் ஒன்றும் தென்படவில்லை. .. நா வறண்டது.. தாகம் வாட்டியது.. இப்போது அவன் தண்ணீர் தேடினான். அப்போது ஆச்சர்யமான கிணறு ஒன்றைக் கண்டான். அள்ளிப் பருகினான்.
ஆஹா.. அமிர்தமாக இனித்தது. ஆச்சர்யம் பொங்க கண்களை விரிக்க, அங்கே கிணற்றின் அருகில் அம்மையப்பருடன் ஆனைமாமுகக் கடவுள் அழகான சிலை வடிவில் காட்சி கொடுத்தார். ஆனந்தக் கூத்தாடிய அரசகேசரி தான் கண்ட கனவின் பயன் இது.. கண்ட இடம் இது என்று மகிழ்ந்தான். ஆகம விதிப்படி கோயிலை கட்டி குடமுழுக்குச் செய்தான். இவ்வாலயத்தின் திருமுற்றத்தில் வைத்தே, தான் செம்பாட்டுக்களால் தமிழில் பாடிய இரகுவம்சப் பெருங்காவியத்தையும் அரங்கேற்றினான். இவை காரணமாக, இக்கோயில் .. இன்று அரசகேசரிப்பிள்ளையார் கோயில் என்றும் செம்பாட்டுப் பிள்ளையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டுப் போற்றப்படுகிறது. இன்றைக்கு அரசகேசரி கட்டிய கோயில் இல்லை.. அதனை போர்த்துக் கேய மத வெறியர்கள் அழித்து விட்டார்கள். ஒல்லாந்தர் காலத்திற்கும் பின் இன்றைய கோயில் சிறு குடிலாக மீள ஆரம்பமானது. இன்றைக்கு இரண்டரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இக்கோயில். யுhழ்ப்பாணத்தின் தனித்துவமான தேர்களுள் ஒன்று நீர்வேலி அரசகேசரியான் ஆலயத்தில் காணப்படுகிறது. இக்கோயிலில் விநாயக சதுர்த்தியை முன்னிட்டுக் கொண்டு கொடியேறி 11 நாட்கள் மஹோற்சவம் நடக்கிறது. மார்கழித் திருவாதிரையைத் தீர்த்தமாகக் கொண்டு வைத்தீஸ்வரருக்கும் சிறப்பாக 10 நாள் உற்சவம் நடக்கிறது. இன்றைக்கு இவ்வாலயத்தில் சிவஸ்ரீ. சாம்பசதாசிவ சோமதேவக்குருக்கள் பிரதான குருவாக இறை பணியாற்றி வருகிறார். இவர் முன்னோர்களே இவ்வாலய குருமார்களாக பல்லாண்டுகள் பணியாற்றியிருக்கிறார்கள்.
1949ல் இவ்வாலய பரிபாலனம் சிவஸ்ரீ. சு.இராமஸ்வாமிக்குருக்கள் அவர்களால் அறங்காவலர் சபையிடம் கையளிக்கப்பட்டது. இன்று வரை அறங்காவலர் சபை இவ்வாலயத்தைச் செவ்வனே நிர்வகித்து வருகிறது. ஓய்வு பெற்ற கிராமிய வங்கியாளரான க.முருகையா போன்றோர் இத்தல வளர்ச்சியில் அறங்காவலர் சபையிலிருந்து கொண்டு பணியாற்றி வருகின்றனர். இத்தலத்து விநாயகப் பெருமான் பேரில் ஊஞ்சல், பதிகம், தோத்திரம் பிள்ளைத்தமிழ் ஆகிய பிரபந்தங்களும் சிவனார் பேரில் ஊஞ்சல் ஆதியனவும் உள்ளன. ஆலயத்தினைச் சுற்றி ஸ்ரீ கணேசா சனசமூக நிலையம், ஸ்ரீ கணேசா முன்பள்ளி, ஸ்ரீ கணேசா அறநெறிப்பாடசாலை, அறுபத்து மூவர் குருபூஜை மடம், சீ.சீ.த.க. பாடசாலை, அன்னதான மடம், போன்ற அறப்பணி நிலையங்கள் அமைந்து அறம் வழவாப் பணியாற்றி வருகின்றன. அண்மைக் காலத்தில் வாழ்ந்த சிவதொண்டன் ஸ்ரீமத் செல்லத்துரை சுவாமிகளின் குலதெய்வமும் அரசகேசரி ஆண்டவனே.. இவ்வாறாக, அந்தணரும், அரசர்களும், அற்புதத் துறவியரும், அறிஞர்களும், கவிஞர்களும்,வணிகர்களும் விவசாயப் பெருமக்களும் யாபேரும் காதலித்துப் போற்றிடும் அரசகேசரி ஆண்டவனை நம்பினால் அவன் கைவிட மாட்டான் என்று ஆலயம் சார்ந்த அன்பர்கள் உறுதி கூறுகின்றனர். கும்பாபிஷேகம் இறுதியாக, 1995ல் குடமுழுக்குக் கண்ட இக்கோயில் புனருத்தாரணம் செய்யப்பெற்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 12.06.2011 அன்று காலை 7.15- 8.15 சுபமுகூர்த்தத்தில் மஹாகும்பாபிஷேகம் காண்கிறது. நாளை புதன்கிழமை 08.06.2011 காலையில் கர்மாரம்பத்துடன் இதற்கான கிரியைகள் ஆரம்பமாகின்றன. 11ம் திகதி சனிக்கிழமை எண்ணைக்காப்பும் இடம்பெறுகிறது. இவ்விழாவிற்கு ஆலய ஸ்தானிகர் கா.சா.சோமதேவக்குருக்கள் பிரதிஷ்டாச்சார்யராகவும், தா. மஹாதேவக்குருக்கள், ஆ.சந்திரசேகரக்குருக்கள், கு.தியாகராஜக்குருக்கள் ஆகியோர் ஸர்வ போதகாச்சார்யர்களாயும், ப.ராஜகோபால சர்மா சர்வசாதகாச்சார்யராயும் பணியாற்றுகின்றனர். தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஏராளமான சிவாச்சார்யார்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். இக்கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நீர்வையூர் பத்தெழுச்சியுடன் விழாக்கோலம் பூண்கிறது. கும்பாபிஷேக காலத்தை தவக்காலமாக.. விரதம் பூண்டு நீர்வை மக்கள் பக்தி சிரத்தையுடன் எதிர்கொள்ளக் காத்திருக்கிறார்கள்.
நீர்வை. தி.மயூரகிரிசர்மா