பூவுலகைக் காத்தருளும் எல்லாம் வல்ல ஈசனாம் சிவனுக்கு ஒரு ராத்திரி, அதுவே சிவராத்திரி. ஆனால் பரப்பிரம்மமான சக்திக்கு 9 ராத்திரிகள். அது நவராத்திரி என்றழைக்கப்படுகிறது.
பொதுவாக பூஜைகளை பகல் நேரங்களிலேயே மேற்கொள்வார்கள். ஆனால் சிவராத்திரி, நவராத்திரி நாட்களில் மட்டுமே மாலையிலும், இரவிலும் பூஜைகளை செய்கிறோம்.
புரட்டாசி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்களே சாரதா நவராத்திரி அல்லது மகா நவராத்திரி என்றழைக்கப்படுகிறது.
9 நாட்கள் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையை தலா 3 நாட்களாகப் பிரித்து மக்கள் வழிபடுகிறார்கள்.
பரப்பிரும்மம் ஒன்றே என்றாலும், உலக மக்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று மூன்று ரூபங்களில் அம்பிகையானவள் தன் மகிமையை வெளிப்படுத்துகிறார்.
முதல் மூன்று நாட்கள் துர்கா சக்தி ரூபமாகவும், இரண்டாவது மூன்று நாட்களில் லட்சுமி வடிவாகவும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி ரூபமாகவும் அம்பாளைச் சித்தரித்து வழிபடுகிறோம்.
துர்கா தேவி துன்பங்களைப் போக்குபவள். லட்சுமி ரூபமானது பொருளாதார நெருக்கடிகளைத் தீர்த்து வைக்கக் கூடியவள். நல்லறிவு இருந்தால்தான் பூரண ஆனந்தத்தை அடைய முடியும் என்பதால், அந்த அறிவை வேண்டி நவராத்திரி விழாவின் நிறைவாக 3 நாட்கள் சரஸ்வதி தேவியாகப் பாவித்து வழிபடுகிறோம்.
9 நாட்கள் நிறைவடைந்து 10வது நாளான விஜயதசமியன்று அம்பிகையானவள், ஆக்ரோஷத்துடன் அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டி பக்தர்களுக்கு அருள் பாலிப்பதையே இந்த 10 நாட்களின் விரதம் மற்றும் பூஜை குறிக்கிறது.
அம்பிகையை விக்கிரக ரூபத்திலோ, படங்களிலோ பிரதிஷ்டை செய்து முறைப்படி பூஜை செய்யலாம்.
ஒன்பது நாட்களிலும் தேவிபாகவத பாராயணம் செய்யலாம். சுமங்கலிகளையும், கன்னிப் பெண்களையும் இல்லத்திற்கு வரவழைத்து, அவர்களை தேவியாகவே கருதி தாம்பூலம், பழங்கள், வஸ்திரங்கள், வீட்டு உபயோகத்திற்குத் தேவையான பொருட்களை அவரவர் வசதிக்கேற்ப அளித்து மகிழலாம்.
இந்த நாட்களில் கொண்டைக்கடலை, கடலைப் பருப்பு உள்ளிட்ட பல்வேறு பயறு வகைகளுடன் விதவிதமான நைவேத்யங்களை நாளுக்கு ஒன்றாக படைத்து வழிபட வேண்டும். பராசக்தியின் பாடல்களை வீடுகளிலும், கோயில்களிலும் பாடி அன்னையை ஆராதித்தல் சிறப்பும், மேன்மையும் தரும்.
பெண்கள், சிறுவர்-சிறுமிகளின் கோலாட்டம், கும்மியடித்து நடனமாடுதல் போன்றவை நவராத்திரி பண்டிகைக்கே உரிய சிறப்பாகும்.
இந்த உலகில் அனைத்தையும் இயக்குவது ஆதிசக்தியே என்று வேதங்களும், புராணங்களும் தெரிவிக்கின்றன. அதனடிப்படையிலேயே பராசக்தியை நவராத்திரி நாட்களில் வழிபடுகிறோம்.
தவிர, உலகைக் காத்து இரட்சிக்கும் ஜகன்மாதாவுக்கு பக்தர்கள் செய்யும் பூஜையாகவும் அமைகிறது நவராத்திரி விழா.
அன்னையை நவராத்திரி காலத்தில் ஸ்ரீராமன் பூஜை செய்ததாக புராணங்கள் மூலம் தெரிய வருகிறது.
நவராத்திரி நாட்களில் வீடுகளில் கொலுப்படி அமைத்து, தெய்வப் பொம்மைகளை வைத்து மகிழ்வது தொன்றுதொட்டு வரும் வழக்கமாக உள்ளது.
இந்த நாட்களில் கொலு வைத்து வழிபடுவதோடு, ஆண்டு முழுவதும் அம்பிகையை நம் இதயங்களில் நிரந்தரமாக வைத்து வழிபடல் வேண்டும்.
அம்பிகையை - சக்தி சொரூபத்தை நினைத்து தியானிப்பதால், சகல பாவங்களும் நிவர்த்தியாகும் என்பது திண்ணம்.